1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்:தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.
நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
கிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது. 2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன், பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.
ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.
உயிரைக் காக்க அக்காலத்தில் மன்னர்கள் இரும்புக்கவசம் அணிந்து கொண்டனர். அதுபோல, கவச நூல்களைப் பாராயணம் செய்தால் நம்மைச் சுற்றி தெய்வத்தின் மந்திரசக்தி கவசமாகத் துணைநிற்கும் என்பர். கவசப்பாடல்களில் கந்தசஷ்டி கவசம் மிகவும் புகழ்பெற்றது. தேவராய சுவாமிகளால் எழுதப்பட்ட இந்நூல், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அரங்கேற்றப்பட்டது. காங்கேயத்தை மையமாகக் கொண்டு சென்னிமலை, ஊதிமலை, வட்டமலை, சிவன்மலை,திருமுருகன்பூண்டி ஆகிய மலைகள் உள்ளன. இவற்றில் தலைசிறந்தது சென்னிமலை. சென்னி என்ற சொல்லுக்கே தலை என்று தான் பொருள். சிரகிரி, சென்னியங்கிரி, புஷ்பகிரி, சிகரகிரி என்ற பெயர்களும் இதற்குண்டு. தேவராய சுவாமிகள் கவசத்தில் சிரகிரி வேலா சீக்கிரம் வருக! என்று இத்தல முருகனை வேண்டுகிறார். இங்கு மூலவராக கைலாசநாதரும், பெரியநாயகியும் வீற்றிருக்கின்றனர். புண்ணாக்குச் சித்தருக்கு சமாதியும் இங்குள்ளது. கந்தசஷ்டியும், தைப்பூசமும் சிறப்பான விழாக்கள். அக்னிஜாத சுப்பிரமணியர், சவுரபேய சுப்பிரமணியர், சரவணபவன், தேவசேனாதிபதி ஆகிய பெயர்களிலும் முருகப்பெருமான் கோஷ்டத்தில் வீற்றிருக்கிறார்.