31-10-2011- சூரசம்ஹாரம் கந்தசஷ்டி
தீபாவளி பண்டிகைக்குப்பின் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் இருப்பார்கள்.இந்த சஷ்டி விழா பல தலங்களில் நடத்தப்பட்டாலும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடும் தலம் திருச்செந்தூர்தான். ஏனெனில் இங்குதான் செந்தில்நாதன் சூரனை சம்ஹரித்தார்.
சூரபத்மன் முற்பிறவியில் தட்ச னாக இருந்தான். பின் மாயைக்கும் காஸ்யப முனிவருக்கும் சூரபத்மனா கப் பிறந்து, தன் பேரன் குமரனால் வதம் செய்யப்பட்டு- வாழ்வளிக்கப் பட்டு, பேரனுடனேயே மயிலாகவும் சேவலாகவும் எப்போதும் இருக்கும் பேறு பெற்றான்.
மயில் வாகனம்
முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.
சிக்கல்
"சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம்' என்பர். சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும் பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.
கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர்.
சுக்ராச்சாரியார் அசுர குரு. அசுரர் குலம் தழைக்க அவர் விருப்பப்படி, அசுரமங்கை மாயை காஸ்யப முனிவரை மயக்கினாள். இருவருக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்க முகன், தாரகாசுரன் எனும் மூன்று மகன்கள். மகள் அஜமுகி. பின் மாயை முனிவரை விட்டு விலகிவிட்டாள்.
இந்த மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பற்பல வரங்கள் பெற்றனர். பின் இவர்கள் சாமர்த்தியமாக ஒரு வரம் பெற்றனர். அதாவது சிவனின் சக்தியால் மட்டுமே அழிவு வரவேண்டும்; கர்ப்பத்தில் பிறக்காத ஒரு ஆண் மகனால் மட்டுமே இறக்க வேண்டும் என்பதுதான் அது. பின் அனைவருக்கும் பல துன்பங்களைத் தந்தனர். தேவர்களை அடிமைப்படுத்தினர்.
இதனால் தேவர்கள் சிவனிடம் முறையிட்ட னர். "என் ஆற்றலால் உருவாகும் மகனால் நன்மை பெறுவீர்கள்' எனக் கூறிய சிவன் தவத்தில் ஆழ்ந்தார்.
சிவனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினர். அவன் எய்த அம்பால் சிவன் நெற்றிக்கண் திறக்க, மன்மதன் தகனமானான். பின் சிவன் தன் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜா தம், அதோமுகம் என்ற ஆறு முகங்களின் நெற்றிக்கண்களில் இருந்து ஆறு பொறிகளைத் தோற்றுவித்தார். (இப்படி காமதகனமும் ஆறு பொறிகளும் தோன்றிய தலம்தான் கொருக்கை. அதனால் இத்தலம் முருகன் பிறந்த தலம் என்கின்றனர். இது சீர்காழி- திருப்பனந்தாள் வழியில் மலைமேடு அருகேயுள்ளது.)
இந்த ஆறு பொறிகளும் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆயின. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்ட இவர்களை பார்வதி பாசத்துடன் சேர்த்தணைக்க, ஓராரு முகமும் ஈராறு கரமும் கொண்டு ஆறுமுகன் தோன்றினான். இவன் வளர்ந்து குமரன் ஆனதும் (கர்ப்பவாசமின்றி பிறந்தவன்) சிவன் முருகனது அவதார நோக்கத்தைக் கூறி சூரனை வதம் செய்யச் சொன்னார்.
சிவன் தன் ஆற்றல்களைத் திரட்டி ஒரு வேலாக்கி, அந்த சிவசக்தி வேலை முருகனுக்குக் கொடுத்து, வீரபாகு தலைமை யில் படைகளை உருவாக்கி அவர்களையும் முருகனுடன் அனுப்பினார். சக்தியும் தன் சக்தியத்தனையையும் திரட்டி ஒன்றாக்கி சக்தி வேலாயுதம் செய்து முருகனிடம் கொடுத்தாள். (அதைத்தான் சிக்கலில் வாங்குகிறார்.)
இப்படி போரிடச் சென்ற முருகன், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.
குமரன் சூரனை வதம் செய்யப் போரிடும்போது சூரபத்மன், "இந்த சிறுவனையா கொல்வது? வேண்டாம். எனினும் போரில் நான் வெல்ல வேண்டும்' என எண்ணிப் போரிட்டான். இதை அறிந்த கந்தன் தன் விஸ்வரூபத்தை ஒரு நொடி காட்டினான். அப்போது சூரன் இந்த சிறுவன் தன் பேரன் என்பதை உணர்ந்தான். ஒரு நொடிப் பொழுதுதான்; பின் மறந்தான். அந்த ஒரு நொடியிலேயே முருகனிடம் "உன்னைத் தாங்கும்பேறு தருவாயா?' என கேட்டும் விட்டான்.
எனவே தாத்தாவைக் கொல்ல மனமின்றி முருகன் போர் செய்து கொண்டி ருந்தபோது, சூரபத்மன் மாமரமாகி கடலில் தலைகீழாய் நின்றான். குமரன் தன் கூர்வேலால் மாமரத்தை இருகூறாக்கி, ஒன்றை தன்னைத் தாங்கும் வாகனமான மயிலாகவும்; ஒன்றை சேவலாக்கி தன் கொடியிலும் வைத்துக்கொண்டு சூரனுக்குப் பெருவாழ்வு கொடுத்தான். சூரசம்ஹாரம் முடிந்தது. சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பி னான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத் தைக் காணலாம்.
சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா
இந்த ஆறு நாட்களும் வேள்விக் கூடத்தில் காலையும் மாலையும் வேள்வி நடத்துவார்கள். பின் செந்தில்நாதன், வள்ளி, தெய்வானை உற்சவர்களை தங்க சப்பரத்தில் இருத்தி வீதியுலா வரச் செய்து சண்முக விலாச மேடையில் தீபாராதனை செய்வர்.
ஒவ்வொரு நாள் இரவும் சஷ்டி மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்கத் தேரில் வலம் வரச் செய்வார்கள். அப்போது அடியார்கள் வேல் வகுப்பு, திருப்புகழ், வீரவாள் வகுப்பு பாடியபடி செல்வார்கள்.
ஆறாம் நாள் மாலை கடற் கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். அப்போது கடலும் உள்வாங்கி இடம் தரும். இந்நிகழ்ச்சியைக் காண பக்தர் கூட்டம் அலை மோதும். பார்க்கும்போது தலையா கடல் அலையா எனத் தோன்றும்.
முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர்.