சம்ஸ்க்ருதத்தில் பதிணெண் புராணங்கள் உள்ளன:
சைவம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், மத்ஸயம், கூர்மம், பிரம்மாண்டம், காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம், பிரம்மம், பத்மம், ஆக்னேயம், பிரம்மகைவர்த்தனம் என்பவற்றுள் ஸ்கந்தபுராணம் என்ற மஹாபுராணமும் ஒன்று.
“முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்”
என்று நூற்பயனை விதந்து உரைக்கிறது இப்பாடல்:
“இந்திராகிப் பார் மேல் இன்பமுற்றினிது மேவிச்
சிந்தையில் நினைந்த முத்தி சிவகதி அதனில் சேர்வர்
அந்திமில் அவுணர் தங்கள் அடல் கெடமுனிந்த செவ்வேள்
கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்தோதுவோரே”
சிந்தையில் நினைந்த முத்தி சிவகதி அதனில் சேர்வர்
அந்திமில் அவுணர் தங்கள் அடல் கெடமுனிந்த செவ்வேள்
கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்தோதுவோரே”
பெருமை மிக்க இப்புராணத்திலுள்ள ஆறு பெரிய சங்கிதைகளுள் ஒன்று சங்கரசங்கிதை. இச்சங்கிதையிலுள்ள பதின்மூன்றாயிரம் ஸ்லோஹங்களால் ஆக்கப்பெற்றது சிவரஹஸ்ய காண்டம் என்ற உயர்ந்த பகுதி. இதில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவ்வேழு காண்டங்களுள் முதன்மையான ஆறு காண்டங்களை இணைத்து அழகுத் தமிழில் ‘கந்தபுராணம்’ என்ற ஞானக்களஞ்சியமாக தந்திருக்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
பொ.பி 12, 13ம் நூற்றாண்டுகளில், தமிழகத்தின் காஞ்சியில், குமரகோட்டம் முருகன் ஆலய அர்ச்சகராகத் திகழ்ந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகனே ‘திகட சக்கர’ என்று முதல் அடியெடுத்துக் கொடுக்க 10345 அருந்தமிழ்ச் செய்யுள்களால் கந்தபுராணத்தை அவர் ஆக்கியிருக்கிறார்.
‘உபதேச ரத்னாகரம்’ என்று போற்றப்படும் கந்தபுராணம் காப்பிய இலக்கணங்கள் மிக்கதாக, சித்தாந்தக் கருத்துக்களின் செறிவுடையதாக, தத்துவார்த்த உண்மைகள் பொருந்தப் பெற்றதாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கந்தபுராணத்தின் தமிழ் நடையும் வியந்து நயந்து உண்ண வேண்டியது.
முருகப்பெருமானாலேயே ஆணையிடப்பெற்று, அவனாலேயே தினமும் பரிசீலனை செய்யப்பெற்றது. ஆயினும், அரங்கேற்றத்தில் அறிஞர் முன்றலில் இலக்கணச் சந்தேகம் உண்டானது. அப்போது கந்தவேட் பெருமானே சிறுவடிவு தாங்கி வந்து, தன்னால் அங்கீகரிக்கப்பெற்ற நூல் அது என்று யாவரும் அறிய சந்தேகம் நீக்கினார். மிகத் தெளிவாக ‘இறையாணை’ பெற்ற நூல் கந்தபுராணம் என்பது சைவத்தமிழ் மக்களின் நம்பிக்கை.
அரிய தத்துவப்புதையல்கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.
கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.
அவனது மனைவியராகப் புராணம் இரு தேவியரைக் காட்டும். அவளுடைய வலது பக்கம் விளங்குபவள் வள்ளி. அவள் இச்சா சக்தி. மண்ணுலகில் பிறந்து வளர்ந்தவள். தமிழ்மகள். வேடுவனான நம்பிராஜன் புதல்வி. அத்தேவி இகலோக சுகத்தைத் தருவாள். அத்தேவியை முருகன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டான்.
முருகனின் இடது பக்கம் எழுந்தருளுபவள் தேவசேனா. விண்ணுலகில் பிறந்தவள். தேவராஜனின் புதல்வி. கிரியாசக்தி. அவளை இறைவன் கற்பு முறையில் பிரம்ம விவாகம் செய்தான். முருகனை வழிபடுவோருக்கு அத்தாய் பரலோக வாழ்வில் இடம்தருவாள்.
முருகனின் மூன்றாவது சக்தி வேல். முருகனின் கரத்தில் விளங்குகிறது. வெற்றியைத் தருவது. ஞானமே வடிவெடுத்த ஞானசக்தி அது.
‘வெல்’ என்ற வினையடியில் தோன்றியது ‘வேல்’. அது ஞானமே உருவானது. ஆழந்து அகன்று கூர்மையாகி அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. செவ்வேட் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் சேவற்கொடி அஞ்ஞான இருளகற்றி ஞானஒளி வரக் கூவுகிறது. (கொக்கு- மாமரம், அற- அறுத்த, கோ- நம் அரசே) வாகனமான மயில் ஆசை என்ற பாம்பை அடக்கி பிரம்மசக்தியாக ஓம்கார ரூபமாக விளங்குகிறது.
முருகன் கைவேலுக்கு உரிய சிறப்பு வேறு எப்படைக்கும் இல்லை. தமிழ் இந்துக்களில் பலருக்கு ‘வேலாயுதம்’ என்றே பெயர் இருக்கிறது. இப்படி எவரும் வேறு எந்தப் படைக்கலனையும் தங்கள் பெயராகக் கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையிலுள்ள பிரபல யாழ். நல்லூர் போன்ற பல முருகன் ஆலயங்களில் கருவறையில் முருகனின் திருவுருவத்திற்குப் பதிலாக வேலாயுதமே விளங்கிடக் காணலாம்.
‘அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’
என்று தேவர்களின் வாக்காக வேலாயுதத்தைக் கந்தவேளாகவே கண்டு போற்றியதாகக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
இறையருள் துணையுடன் ஆணின் விந்துவும் பெண்ணின் நாதமும் கலந்து குழந்தையாகிறது. (அருணகிரிநாதர் ‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்று இதனைத் திருப்புகழில் பாடுவார்.) இறைவனிடமிருந்து வந்த நாமெல்லோரும் இறுதியில் இறைவனையே சென்றடைய வேண்டும். அழிவின் பின்னர் சூரபத்மன் நாதவுருவாகச் சேவலாக மாறி இறைவனின் கொடியாகவும் விந்துருவுருவாக மயிலாக மாறி முருகனின் வாகனமாயும் மாறியது இதை வெளிப்படுத்துகின்றது என்பர். அவனையே அடைந்து அவனருளாலே அவன் தாள் வணங்குதலே முக்தி. இதனைப் பெற்றான் சூரன். இச்சம்பவத்தை ‘சூரன் பெற்ற பேறு’ என்று கொண்டாடுவார்கள்.
ஆன்மாக்கள் நல்லறிவை நாடித் தவிக்கும் போது இறைவனே குருவாக வந்து அருள்வான் என்பதை சிவனார் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசித்தமை சுட்டுகிறது.
சிவனார் காமனை எரித்ததும் காலனைக் காலால் உதைத்ததும் அவர் காமத்தையும் மரணத்தையும் வென்றவர் என்பதையும், அவர் அடியார்களுக்கும் இவற்றால் துன்பமில்லை என்பதையும் உணர்த்தி நிற்கிறது.
இறைவனை இகழ்ந்து அவனை அவமதிப்பவர்கள் மிகுந்த அல்லல்களை அநுபவிப்பர் என்பதை தக்கன் யாகத்தை இறைவன் அழித்தமை காட்டுகின்றது.
கந்தபுராணத்தில் தாரகன், சிங்கன், சூரபத்மன் என்ற மூன்று அசுரச் சகோதரர்களின் கதை கூறப்படுகின்றது. தாரகன் உலகமே உண்மை என்று வாழ்ந்தவன். சைவசித்தாந்த நிலையில் அவனை “மாயா மலத்திற்கு” உவமிப்பர். சிங்கன் கன்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; அவனைக் “கன்ம மலத்திற்கு” உவமிப்பர். சூரபத்மன் “ஆணவ மலம்”. இறுமாப்பே அவன் இயல்பு.
இம்மூவரையும் முறையே அழித்தமை ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே இயல்பாகச் செய்ய வல்ல பெருஞ்சிறப்பு.
‘தன்னைத் தான் காதலாகில் எனைத் தோன்றும்
துன்னற்க தீவினைப் பால்’
துன்னற்க தீவினைப் பால்’
என்பது வள்ளுவர் மொழி.
அதாவது ‘நீ உன்னை விரும்பி, உனக்கு நன்மையை விரும்பி, தீவினை ஏதும் செய்யாமல் இருப்பாயாக’ என்று அறிவுறுத்துகிறார். சூரனோ எல்லா விதத் திறனும் அறிவும் உடையவனாய் இருந்தும், இறையருள் பெற்றவனாய் இருந்தும், தீவினை செய்து தன்னைத் தானே அழித்துக் கொண்டமை வள்ளுவர் வாக்கிற்குத் தக்கச் சான்றாகும்.
இயற்கையும் தெய்வமேமூவுலகிற்கும் முதல்வன் குழந்தையானான். தேவர்களின் வேண்டுகோளின் படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பிறந்து ஆகாயத்தில் தவழ்ந்து வாயுவாலும் அக்கினியாலும் தாங்கப் பெற்று ப்ருதிவியிலே ‘சரவணப்பொய்கை’ ஜலத்திலே குழந்தையாய் மாறியது என்று இப்புராணம் சொல்லுகிறது. இப்படிச் சொல்வது பஞ்சபூதங்களினூடாக இறையாட்சியை அவதானிக்கச் செய்கிறது. முருகனின் தோற்றத்தில் பஞ்சபூதங்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது.
ஆலய கும்பாபிஷேகக் கிரியைகளில் ஆகாயச் சூரியனிலிருந்து ‘சூரியாக்கினி’ என்ற நெருப்புப் பெறப்படுகிறது. அந்த அக்கினி மண்ணில் உள்ள குண்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டு வாயுவின் துணையுடன் வளர்க்கப்பெறுகிறது; பின், அதனை கும்பஜலத்தில் இணைத்து வழிபாடாற்றுவதுடன், இறுதியில் இறை திருவுருவத்தில் நீரால் அபிஷேகித்து இறைசாந்நதித்யம் உண்டாகப் பிரார்த்திக்கப்படுகிறது. இதைப் பஞ்சபூதங்கள் இணைந்து செயல்படும் நிகழ்வோடு இணைத்து நோக்கலாம்.
இந்த இடத்தில் ‘ஒருதிரு முருகன் வந்து உதித்தனன்’ என்று கச்சியப்பர் குறிப்பிடுவார். அதாவது என்றுமுள்ள இறைவன் இந்த வேளையில் முருகனாக உதித்தனன். (காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கிறான். ஏனெனில், அவன் முன்னரே இருப்பவன்.)
போரும் சீரும்போருக்கு முன் இரு முறை தூதனுப்பியமை, மறைந்து நின்று போராடாமை, ஆயுதம் ஏந்தாதவனுடன் போராடாமை, தனக்குச் சமானமற்ற வீரனுடன் போராடாமை, புறங் கொடுப்பவனைக் கொல்லாமை ஆகிய செயற்பாடுகள் கந்தபுராணத்திலுள்ள போரில் ‘அசுரர்களால் கூட’ அநேகமாகக் கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். செஞ்சோற்றுக்கடனுக்குச் சிங்கனும், பிதிர்க்கடனுக்கு இரணியனும், மானத்திற்குச் சூரனும், கற்பிற்கு சூரன் மனைவியும் கந்தபுராணத்தில் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றனர்.
ஆனால், இன்றைய உலகில் நடைபெற்ற, நடைபெறும் மோதல்கள் இவற்றை எல்லாம் புறக்கணிக்கிறது. எந்தப் பிரச்சினையிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்கிற மருத்துவமனையையும் தாக்குகின்றனர்.
இவையெல்லாம் நிச்சயமாக இன்றைய சமூகத்தைக் காட்டிலும் கந்தபுராண காலச் சமூகம் உள, ஒழுக்க ரீதியில் உயர்வானதாகவே இருந்திருக்கும் என நம்பச் செய்கின்றன.
கந்தபுராணம் என்பது தமிழரின் வாழ்வோடு இணைந்தது. ஆக, இதில் ஊறிய எவரும் இதைக் கதை என்று சொல்வதில்லை. சிற்சில இடங்களில் கதைக்குரிய உயர்வு நவிற்சி இருந்தாலும், இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்மையில் நடந்த சம்பவம் என்றே அவர்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறான ஆய்வுகளின் படி முருகன் பிறந்தது கைலாசச் சாரல் என்றும், தரை வழி யுத்தம் நடந்தது திருப்பரங்குன்றம் என்றும், விண் வெளி யுத்தம் நடந்தது திருப்போரூர் என்றும், கடல் வழிச் சமர் நடந்தது திருச்செந்தூருக்கு அப்பாலுள்ள கடல் என்றும் ஐதீகம். இலங்கையின் கதிர்காமத்தில் படைவீடு அமைத்துத் தங்கி, அப்பால் தெற்கே சூரனுடைய நகரை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுவதால் சூரன் அக்கால ஆப்பிரிக்கதேச அரசன் என்று கருதுவாரும் உள்ளனர். முருகனின் வலது புறம் எழுந்தருளியிருக்கும் வள்ளியம்மை தமிழ் மொழி பேசும் குறவர் இனப் பெண் என்பது வேறு ஐதீகம். இதுவும் ஆய்விற்குரியதே.
யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரத்தில் உள்ள பிரபல ஸ்கந்த ஸ்தலம் ‘மாவிட்டபுரம்’. ஆக, திருச்செந்தூருக்கும் மாவிட்டபுரத்திற்கும் இடைப்பட்ட பரந்த சமுத்திரப் பகுதியில் மாமரமாகி மாயா ஜாலங்கள் செய்து முரகனுடன் சூரன் போராடியிருக்கிறான்.
‘தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்’
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்’
என்ற கந்தபுராண அறைகூவல் எங்கள் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி “ஓ… அஞ்ஞானிகளே, கடந்த காலம் போயது. உங்கள் அறியாமை மூட்டைகளை நீக்க நல்ல ஒரு வழி கிடைத்திருக்கிறது. உடனடியாகக் கந்தப்பெருமானின் கழலடிகளைப் போய்ச் சேருங்கள். நீங்கள் ஞானியராவீர்கள்…” என்று நமக்கெல்லாம் அரிய பெரிய நற்செய்தி சொல்கிறது.
காதல் முருகனைக் காதலிமுருகு என்பது அழகு. ஆதன் மறு பெயர் அன்பு. அவன் பால் காதல் கொண்டோர் அனேகர்.
இறைவனின் இரு-பெண் திருமணம் சமூக சமத்துவத்தைக் காட்டி நிற்கிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த அதே இறைவன், தானே வலிய வந்து மனிதர்களில், அதிலும் சாதி முதலிய வேறுபாடுகள் பாராமல் வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான். இதை நம் புராணங்கள் மிகவும் தெளிவாகக் காட்டி வந்துள்ளன. இவை தவிர பூவுலகைச் சேர்ந்த வள்ளியம்மைக்குக் கொடுக்கப்படும் உயர்ந்த அந்தஸ்து தனிச்சிறப்பு. எவருமே ‘முருகனுக்கு வள்ளி’ என்றே கூறக் கேட்கிறோம்.
மேலும் வள்ளி தமிழ் மகள். இது தமிழுக்குக் கிடைத்த சிறப்பு.
“….. ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடற் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே”
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே”
என்று இதைப் பற்றி அருணகிரிப் பெருமான் உருகிப்பாடுகிறார்.
ஆணும் பெண்ணும் கூடி வாழும் வாழ்விற்கு இந்துப்பண்பாடு கொடுத்த முதன்மையையும், காதற் சிறப்பையும், அன்னை உமையாளுக்கும் இறைவனுக்கும் நிகழ்ந்த திருமணமும் வெளிப்படுத்துகின்றது.
‘கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’
என்ற ஞானசம்பந்தர் வாக்கு ஈண்டு சிந்திக்கத் தக்கது.
சைவ-வைஷ்ணவ ஒற்றுமைகந்தபுராணக் கதையுடன் இராமாயணக் கதையை ஒப்பு நோக்கும் போது சைவ-வைஷ்ணவ ஒற்றுமையை உணரலாம்.
சைவசமயிகளின் பரம்பொருளான சிவபெருமானின் புதல்வன் முருகன். வைஷ்ணவர்களின் பரம்பொருளான விஷ்ணுவின் புதல்விகளாகவும் கொண்டாடப்பெறும் வள்ளி, தேவசேனா தேவியரைக் கல்யாணம் செய்தமை சமய ஒற்றுமை. தவிர முருகன் சிவகுமாரனே ஆகிலும் விஷ்ணு அம்சம் நிரம்பப் பெற்றவன். ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களில் நடைபெற்ற அத்புத நிகழ்ச்சிகளோடு அவனது ஒவ்வொரு செய்கையையும் இணைத்துப் பார்க்கும் போது ஏற்படும் இன்பமே தனியானது. அலாதியானது.
இதனை உண்மையிலேயே செயற்படுத்தியவர் சந்தக்கவி அருணகிரியார். திருப்புகழ் எங்கும் முருகன் பெருமை போலவே திருமால் பெருமையும் நிறைந்திருக்கிறது. தவிர, முருகனை அவர் ‘பெருமாள்’ என்றே விளித்துப் பெருமை செய்திருக்கிறார்.
‘காலமாய்க் காலமின்றிக் கருமமாய் கருமமின்றி
கோலமாய்க் கோலமின்றி குணங்களாய் குணங்களின்றி
ஞாலமாய் ஞாலமின்றி அநாதியாய் நங்கட்க்கு எல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண்டுற்றான்’
கோலமாய்க் கோலமின்றி குணங்களாய் குணங்களின்றி
ஞாலமாய் ஞாலமின்றி அநாதியாய் நங்கட்க்கு எல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண்டுற்றான்’
என்ற கச்சியப்ப சிவாச்சாரிய ஸ்வாமிகளின் திருவாக்கை மனங் கொண்டு அப்பெருமானின் திருவடிகளில் சரண்புகுவோம்.
முருகனுடைய ஆறுதிருமுகங்களும் அன்பு, அறிவு, ஆற்றல், அழகு, அமைதி, ஆளுமை ஆகிய பண்புகளை உணர்த்தும். நாற்றிசையும் மேலும் கீழும் ஆக, ஆறு பக்கங்களும் பார்த்து நிற்கும் இத்திருமுகங்களை நம்புவோருக்கு துன்பம் எத்திசையாலும் வாரா. அவனது கரங்கள் பன்னிரண்டும் கொடுப்பதற்கென்றே பிறந்தன. அதனை,
“முழுமதி அன்ன ஆறுமுகங்களும் முன் நான்காகும்
விழிகளில் அருளும் வேலும் வேறுள படையும் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலரடியும்….”
விழிகளில் அருளும் வேலும் வேறுள படையும் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலரடியும்….”
என்று தெவிட்டாத தேனாகத் தமிழில் பாடுவார் கச்சியப்பர்.
கந்தபுராண காவிய ரசனையை உளத்தில் கொள்வோம்.
செம்மொழியான செந்தமிழின் தலைவன் முருகன். அவனடி பணிவோம். தமிழ்ஹிந்து தர்மம் சிறக்கப் பிரார்த்திப்போம்.
‘அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்
ReplyDeleteஎந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’
"முருகா முருகா, "முருகா முருகா, "முருகா முருகா....
ReplyDelete