Saturday 19 November 2011

கந்த சஷ்டி

கந்த சஷ்டி நோன்புபற்றி ஒரு புராண வரலாறுண்டு. பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப்பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடமிருந்து மேலான சக்தியினைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம், சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும் நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாக தோன்றிய அந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு)கொண்டு காணப்பட்டனர். இந்நால்வரும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். இவர்களின் கடுந்தவத்திற்கு இரங்கிய பரம்பொருள் இவர்கள் முன்தோன்றி வேண்டும் வரங்களை அருள்வதாகக் கூறி என் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியினால் உங்களை அழிக்க முடியாது என அருளினார். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகள் சரவணப் பொய்கையில் ஆறு கார்த்திகைப் பண்களால் வளர்க்கப்பட்டு உரிய காலம் வந்ததும் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியினால் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுக சுவாமி எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்யும் போது மாயையினால் மாமரமாக நின்றான். அவனைத் தனது ஞான வேலால் பிளந்து அவனது ஆணவத்தினை அடக்கி சேவலும், மயிலுமாக மாற்றி சேவலை தன் கொடியாகவும் மயிலைத் தன் வாகனமாகவும் கொண்டு சூரனுக்கு சாரூப முத்தியை அருளி ஆட்கொண்டார். இவ்வாறே சிங்க முகன் தாருகன் என்போரின் அகங்கார மமகாரம் அழிக்கப்பட்டு இவர்கள் முறையே அம்பிகையினதும், ஐயனாரினதும் வாகனங்களாகி ஆட்கொள்ளப்பட்டனர். இவ்விரதத்தினை வாழ்க்கையில் எந்நிலையில் உள்ளவர்களும் தமக்கு வேண்டிய வரத்தினைப் பெற அனுஷ்டித்து அவற்றினை பெற்றுக் கொள்ளலாம் என்பது திண்ணம். ""மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ'' எனும் வரிகளும் ""எந்த நாளும் ஈரேட்டாய் வாழ்வார்'' எனும் வரி மூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதையும் அறியமுடிகின்றது. மேலும் கந்த சஷ்டி கவசம் என்னும் பாடலைப் பாடிய தேவராசன் சுவாமிகள் பல ஆண்டுகளாக மாறாத கொடிய வயிற்று வலியால் பீடிக்கப்பட்டு இருந்த போதிலும் இவ்விரதத்தினை அனுஷ்டித்து முருகன் அருளால் குணமடைந்தார்.