Saturday 25 June 2011

அறுபடை வீடுபோல் புகழ் பெற்ற ஆறு குமரக் கோட்டங்கள்!

முருகப் பெருமான் விரும்பி உறையும் ஆறு படை வீடுகள் சிறப்பித்துக் கூறப்படுவதுபோல், சென்னையில் கந்தக் கோட்டம், காஞ்சியில் குமரக் கோட்டம், திருவையாற்றில் வில்லேந்திய வேலவன் கோட்டம் ஆகியவையும் தனிப்பெருமை வாய்ந்தவை.

தஞ்சையிலிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலம் திருவையாறு. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புகளையும் உடையது. இங்கு எழுந்தருளியுள்ள மூலப் பரம்பொருள் மூவருக்கும் கோவில் பெயருண்டு என்பதே தனிப்பெருமை.

இறைவன் அருள்மிகு ஐயாறப்பர் கோவில் காவிரிக் கோட்டம் என்றும்; இறைவி அருள்மிகு அறம்வளர்த்தநாயகி கோவில் திருக்காமக் கோட்டம் என்றும்; அருள்மிகு வில்லேந்திய வேலவன் கோவில் வேலவன் கோட்டம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

ஐயாறப்பன் கோவிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பிராகாரத்தின் நடுவில் தனியாக அமைந்துள்ளது வேலவன் கோட்டம். இங்கு முருகப் பெருமான் வில்லேந்திய வேலவராக- தனுசு சுப்பிரமணியராக அருள்பாலித்து வருகிறார்.

சிதம்பரத்தில் பஞ்சாக்கரப் படிகள் அமைந்துள்ளதுபோல் இங்கு சடாக்கரப் படிகள் அமைந்துள்ளன. அவற்றைக் கடந்து சந்நிதியை அடைய வேண்டும்.

வில்லேந்திய வேலவன் ஐந்தடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். அவரது இருபுறமும் வள்ளியும் தெய்வானையும் எழுந்தருளியுள்ளனர். வேலவன் முன் இடத்திருக்கரத்தில் நீண்டுயர்ந்த கோதண்டமும், முன் வலத்திருக்கரத்தில் நீண்ட அம்பும், பின் இடத்திருக்கரத்தில் சக்தி ஆயுதமும், பின் வலத்திருக்கரத்தில் குலீசமும் கொண்டு காட்சி அளிக்கிறார்.

தென்முக மயிலின் அருகே ஒரு கால் நேராகவும், ஒரு கால் சாய்ந்தும் திரிபங்க நிலையில் தரிசனம் தருகிறார். இங்கு மயிலின் முகம் இடம் மாறி வலப்புறத்தில் உள்ளது தனிச்சிறப்பு. மயிலின் வாயில் பாம்பு பின்னிக்கொண்டிருக்கும்.

வலப்புறத்தே வள்ளி தன் இடக்கரத்தில் மலர்ந்தும் மலராத தாமரை மலரை ஏந்தி, வலக்கரத்தில் கத்யவலம்பித முத்திரையுடனும்; இடப்புறத்தில் தெய்வானை வலக்கரத்தில் கருங்குவளை மலர் தாங்கி, இடக்கரத்தில் முத்திரை கொண்டும் காட்சி அளிக்கிறார்கள்.

எல்லாம் வல்ல முழுமுதற் பரம்பொருளே வேலவனாக- இச்சா சக்தியே வள்ளியாக- கிரியா சக்தியே தெய்வானையாக- ஞான சக்தியே வேலாயுதமாக- நாதமெனும் ஒலி வடிவே சேவலாக (இங்கு வில்) ஓம் என்னும் பிரணவமே மயிலாகக் கொண்டு திருவையாற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

முருகனை வழிபட்டால் எண்ணியவை ஈடேறும். வறுமை, துன்பங்கள் நீங்கும். அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை அளிப்பான். திருமண பாக்கியம், புத்திரப் பேறு வேண்டியும் அவனைப் பிரார்த்திக் கொண்டு பலனடைந்தோர் பலர்!

வைகாசி விசாகம்

வதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு "கீழே இறங்கி வருதல்' என்று பொருள். உலகில் அதர்மச் செயல்கள் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும் போது, மக்கள் துயர் துடைக்க இறைவன் ஏதோ ஓர் உருவில் கீழே இறங்கி உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். சூரபத்மன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காக்கவே வைகாசி மாத பௌர்ணமி நாளன்று முருகன் அவதரித்தான்.

வைகாசி விசாகம் வேனிற்கால விழா நாள்; முருகனின் அவதார நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தவன் முருகன். சிவபெருமானின் ஆறு தலைகளிலும் 18 கண்கள் உண்டு. ஆனால் முருகன் தோன்றியதோ ஆறு தலைகளிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களால் மட்டுமே. நெற்றிக் கண்ணால் அரூபத்தைக் காண இயலும். சிவனின் நடுக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியமையால் அவன் ஆண் பிள்ளை.

உலகிலுள்ள ஜீவன்களின் தோற்றம் நான்கு வகைப்படும். அவை பைகளில், முட்டையில், நிலத்தினில், வியர்வையில் என புராணம் கூறுகிறது. இதைக் குறிக்கவே படைக்கும் கடவுளுக்கு நான்கு தலைகள். நாம் எல்லாரும்  பெண் வழித் தோன்றியவர்கள். அதனால் பெண் பிள்ளைகள். முருகன் ஒருவன் மட்டும் ஆண் மூலம்- ஆறு அதாவது சிவனின் ஆறு நெற்றிக் கண்களின் சுடரால் பிறந்தவன். எனவே இவன் மட்டும்தான் ஆண் பிள்ளை.

முருகனின் ஆறு தலைகளும் நான்கு திசைகளுடன் மேல், கீழ் என ஆறு திசைகளையும் நோக்கும் வடிவில் அமைந்துள்ளது. முருகனின் 12 கரங்களும் உயிர் எழுத்துகள் 12 ஆகும். முருகனுக்கு தமிழ்க் கடவுள் எனப் பெயர் உண்டு. 12 கரங்களும் 12 மாதங்களையும் குறிக்கும். அத்துடன் வலப்புற ஆறு கரங்கள் உத்தராயணம்; இடப்புற ஆறு கரங்கள் தட்சிணாயனம் எனும் காலத்தைக் குறிக்கும். அவன் வைத்திருக்கும் ஆயுதங்கள் யாவும் நம்மைக் காக்கத்தான்.

பழனியில் கீழே இருப்பது திருஆவினன்குடி. இங்கு குழந்தை வடிவில் முருகன் உள்ளார். மலைமீது பழனி ஆண்டவராக வீற்றுள்ளார். திருவாவினன்குடி என்பது திரு- லட்சுமி, ஆ- காமதேனு, இனன்- சூரியன். இவர்கள் தவம் செய்த இடம். இங்கு வேலாயுதபாணியும், மேலே தண்டாயுதபாணியும் அருள்கிறான்.

போகர் என்ற சித்தர் தன் தவ வலிமையால் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கியவர். "கனக குளிகை' என்ற மூலிகையால் நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் வல்லமை உடையவர். இவர் மனித குலம் பயனுற வேண்டும் என்று முருகன் சிலையை நவ பாஷாணத்தால் நிறுவி, தண்டம் கொடுத்து பழனி மலைமீது தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்தார்.

வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு நடைப்பயணமாக பழனி வந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். 

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றுள் வைகாசி மாதத்தில் ஆன்மிகச் சிறப்புகள் நிறைய உண்டு.

வைகாசி மாதத்தில்தான் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதில் முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத் தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

அத்துடன் அம்மன் ஆலயங்களில் விழாக்களும், வைணவ ஆலயங்களில் பிரம்மோற்சவமும் கருட சேவையும் நடைபெறும். சிவ திருவிழாக்களும் அதிகம் நடைபெறும். அதில் குடந்தை ஆதி கும்பேஸ்வரர் தீர்த்தவாரி வைபவமும், மயிலை கபாலீஸ்வரர் விழாவும், வெள்ளீஸ்வரர் ஆலய திருக்கல்யாணமும் வைகாசியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

வைகாசி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் ரிஷப விரதம் முக்கியமானது.

பெரும் தவமிருந்து 1008 அண்டங்களை 108 யுகங்களாக ஆட்சி புரிந்து உயிரினங்களை வதைத்த சூரபத்மனை அழிக்க, ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக ஆறுமுகன் அவதரித்த நாள்தான் வைகாசி விசாகம்.

சக்தியின் துணையால் சக்திவேல் பெற்று சூரனின் ஆணவத்தை அழித்து ஆட்கொண்ட ஆறுமுகனை வைகாசி விசாகத்தன்று வழிபட்டால் நம் துன்பங்களும் தீய குணங்களும் அழியும்.

அன்று அதிகாலை எழுந்து நீராடி, "முருகா' என கூறி திருநீறு அணிந்து, முருகன் படத்தின் முன் நைவேத்தியம் வைத்து, முதலில் விநாயகர் அகவல் பாடி கணபதியை வழிபட்டு, பின் முருகனுக்குரிய ஸ்லோகங்கள், கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்பிரமணிய சோடஷ நாமாக்கள் கூறி அர்ச்சித்து, தூபதீபம் காட்டி நைவேத்தியம் செய்து பூஜித்தால் நல்ல பலன் பெறலாம்.

சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன், கார்த்திகைப் பெண்டிரால் பாலூட்டப் பெற்றதால் கார்த்திகேயன், மன்மதன் போன்று அழகாக இருப்பதால் குமரன் என்று இன்னும் பல பெயர்களும் முருகனுக்கு உண்டு. விசாக நட்சத்திரத்தின் அதிபதி பிரகஸ்பதி என்ற குரு; தேவதை முருகன். முருகு என்ற சொல்லே அழகு. முருகன் கைவேல் ஆயுத எழுத்தாகும். முருகு என்ற சொல் தமிழில் உள்ள வல்லின, மெல்லின, இடையின எழுத்துகள் ஒன்றாக இணைந்து உருவானதுதான்.

முத்து பிறவியிலேயே ஒளியுடையது. தீப்பொறியில் தோன்றிய முருகன் ஒளிமயமானவனானால் முத்தையன் என்ற பெயரும் உண்டு. முருகன் மும்மூர்த்திகளின் சொரூபம்.மு- முகுந்தன்; த்ரு- ருத்ரன்; க- கமலாசனன் (பிரம்மா). எனவே முருகனை வணங்கி மும்மூர்த்திகளை வணங்கியதாகும்.

வைகாசி விசாகத்தன்று திருத்தணியில் வழங்கப்படும் விபூதியும் பாதரேணு எனப்படும் சந்தனமும் தீராத வியாதிகளைத் தீர்க்கும்.

காஞ்சி குமரக் கோட்டத்தில் பிரம்மோற்சவம் என்ற பெருவிழா நடக்கும். முருகன் பிரம்மனுக்கு தண்டனை வழங்க, ஈசன் குறுக்கிட்டு சமரசம் செய்து, முருகனை பிரணவ மந்திரப் பொருள் விளக்கம் கேட்ட தலம் குமரக் கோட்டம்தான். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை அரங்கேற்றிய இடமும் இதுதான். அப்போது முருகனே வந்து ஆசி கூறி "திகட சக்கர'த்திற்கு விளக்கம் அளித்தார். காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம் ஒரு புறம், காமாட்சியம்மன் ஆலயம் ஒரு புறம் இருக்க, நடுவில் குமரக் கோட்டம் அமைந்துள்ளது. தினமும் தேனாபிஷேகம் நடக்கும் தலமிது.

உற்சவக் காலங்களில் ஏகாம்பரநாதரும், காமாட்சியும், வரதராசப் பெருமாளும் குமரக்கோட்ட ஆலயத்தை வலம் வருவார்கள். தாயும், தனயனும் ஈசனை வழிபட்ட தலம் காஞ்சிபுரம். பிரம்மனுக்கு வைகாசி விசாக விழாவில் தனி இடம் உண்டு. முருகன் தவநிலையில் உள்ளார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்திற்கு கொடி மரம் ஏற்றும் கயிறை, வசவாத்துறை என்ற மீனவ குப்ப கிறிஸ்துவர்கள் தேங்காய் நாரில் திரித்துக் கொடுப்பார்கள். இது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. அன்று மட்டும் அடைக்கப்பட்டே இருக்கும் கிழக்கு வாயிலைத் திறந்து குதிரை வாகனத்தில் பகவதி அம்மன் உலா வந்ததும் பின் மூடப்படும்.

ஆறுமுகன் ஆறு சமயக் கடவுள்

இந்து மதத்தின் உட்கிளைகளாக ஆறு சமயங்கள் உள்ளன. ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு கடவுளை முன்னிலைப்படுத்தி இருக்கின்றனர். இந்த ஆறு சமயத்திற்கும் சமரசக் கடவுளாக ஆறுமுகன் இருக்கிறார். இந்த ஆறு சமயங்களுக்கும் முருகனே பொதுக் கடவுள்.

கௌமார சமய இறைவனான முருகன் சைவ சமய சிவபெருமானுக்கும், சாக்த சமய பராசக்திக்கும் மகன். வைணவ சமய தெய்வமான மகாவிஷ்ணுவுக்கு முருகன் மருமகன். காணாபத்ய கடவுள் கணபதியின் சகோதரன். சௌரத்தின் கடவுள் சூரியன். கரபாஸ்கரன் என்ற முருகனே சூரியன் என்றும் அழைப்பர். இதனால் ஆறுமுகன்தான் ஆறு சமயக் கடவுள். 

முருகனை ஞாயிறு அன்று திருப்பரங்குன்ற படைவீட்டில் வணங்கலாம். திங்கள்கிழமை திருச்செந்தூரிலும், செவ்வாய்க்கிழமை திருவாவினன்குடி என்ற பழனியிலும், புதன்கிழமை திருத்தணியிலும், வியாழக்கிழமை சுவாமிமலையிலும், வெள்ளிக்கிழமை பழமுதிர்சோலையிலும் வணங்குவது சிறப்பு. சனிக்கிழமையில் எல்லா படை வீடுகளையும் வணங்கலாம்.

ஏக தின வழிபாடு

கொங்கு மண்டலத்தில் சீனாபுரம் என்னுமிடத்திலுள்ள 60 அடி உயர குன்றில், முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். சுவாமி மலைபோல் 60 படிக்கட்டுகள் உண்டு. இங்கு திங்கள், வெள்ளியில் ஏராளமான பக்தர் வருவர்.


இங்கு அருகருகே ஆறு மலைகளில் முருகன் அருள்புரிவதால் இதை ஆறு படை வீடுகளாக ஒரே நாளில் எல்லா முருகனையும் வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒரே நாளில் காலையில் சென்னிமலை முருகன், முற்பகலில் சிவன் மலை முருகன், உச்சி வேளையில் கைத்த மலை வேலவன், மாலையில் அருள் மலை முருகன், அஸ்தமன சந்தியில் சீனாமலை முருகன், அர்த்த சாமத்தில் திண்டல் மலை வேலாயுதன் என வழிபடுவார்கள். இப்படி வழிபட்டால் நிறைந்த செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, பேரின்பம் ஆகியவற்றை முருகப் பெருமான் அருள்வார் என்பது மக்களின் நம்பிக்கை. ஈரோடு மாவட்ட பெருந்துறையில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் உள்ளது சீனாபுரமலை. இந்த ஆறு மலை அழகனை நாமும் வணங்கலாமே.

பிரம்மஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த தோஷம் விலகச் செய்ய வேண்டிய பரிகாரத்தை வைகாசி விசாகத்தன்று செய்வார்கள். இராமநாதபுரம்- பரமக்குடி சாலையில் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்திரகோசமங்கை என்னும் தலம். இதை ஆதிசிதம்பரம் என்பர். மரகத நடராஜர் உள்ள தலம். நளன் தோஷம் விலகிய தலமும் இது.

இங்கு வைகாசி விசாகத்தன்று அக்னி தீர்த்தத்தில் நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் மங்களநாதரை அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று உத்தரகோசமங்கை தல புராணம் கூறுகிறது.

அன்று உச்சி வேளையில் அறுகு, அரிசியை தலையில்  வைத்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தின் உள்ளே அக்னி தீர்த்தத்திலும் எள், அரிசி, கோமயம் வைத்து நீராடி மங்களநாதனை வழிபட்டபின் குறைந்தபட்சம் 11 சிவாச்சாரியார்களுக்கு சமாராதனை செய்து தட்சணை கொடுத்து வழிபட்டாலும் பிரம்மஹத்தி விரைவில் விலகும்.

திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்வார்கள்.

முருகனை வணங்கி "ஸுப்ரமண்யஸ்ய மஹிமா' எனத் தொடங்கும் ஸ்லோகம் ஜெபித்தாலும் பிரம்மஹத்தி தோஷம் விலகும். இவற்றை வைகாசி விசாகத்தன்றுதான் செய்ய வேண்டும்.

ஆறெழுத்து ஆறு ஆதாரங்கள்: 

முருகப் பெருமான் நமக்கு வீடுபேற்றை அளிக்கவல்லவன். இந்த வீடுபேற்றை பெற தடையாக இருக்கும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் என்ற ஆறு பகைவர்களை அழித்து வீடுபேறு அடைய நினைப்பவர்கள் ஆறுமுகனின் ஆறெழுத்தை ஓதவேண்டும். ஆறுபடை வீடுகளை சேவிக்க வேண்டும். அதிலும் வைகாசி விசாகத்தன்று செய்வது சிறப்பு.

நம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. இவற்றின் அடையாளமாய் விளங்குவது ஆறுபடை வீடுகள். மூலாதாரம்- திருப்பரங்குன்றம்; தெய்வானையை மணந்து உல்லாசமான தலம். சுவாதிஷ்டானம்- திருச்செந்தூர்; சிந்தனை அலைமோதி துன்பம் துடைக்கும் தலம். மணிபூரகம்- பழனி; ஞானதண்டபாணி உள்ள யோகத்தலம். அநாகதம்- திருவேரகம் என்ற சுவாமிமலை; தந்தைக்கு உபதேசித்த தலம். விசுக்தி- திருத்தணி; சல்லாபமாய் குறிஞ்சியில் விளையாடும் தலம். ஆக்ஞை- பழமுதிர்சோலை; ஞானப்பழம் உதிரும்  சோலையாகிய தலம். இதை, "உல்லாச நீராகுல யோக இத சல்லாப விநோதனும் நீ மலையே' என கந்தரனுபூதியில் அருணகிரிநாதர் கூறுகிறார். 

வேலனுக்கு சிவன் உபதேசம் செய்த தலம் தென்சேரிகிரி. இது பொள்ளாச்சி- திருப்பூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு மலைமேல் உள்ள கோவிலில் வள்ளி, தேவசேனாவுடன் வேலாயுதசாமி கோவில் கொண்டுள்ளார். இங்குதான் பகைவர்களை வெல்ல சிவன் வேலனுக்கு உபதேசம் செய்தார். முருகன் வாகனம் இடப்பக்கம் தலை திருப்பி இருக்கும். இடப்பக்கம் சேவற் கொடிக்குப் பதில் சேவலே உள்ளது.

முருகன் சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்ததுபோல் செம்பனார் கோவில் தலத்தில் அன்னை பார்வதிக்கு உபதேசம் செய்ததாக புராணம் கூறுகிறது.

திரையில் முருகன்

இலங்கை கதிர்காமத்தில் செம்பு ஓடால் வேயப்பட்ட கொட்டகைதான் முருகன் ஆலயம். இங்கு முன்வாசலில் ஏழு திரைகள் உள்ளன. இதில் ஏழாவது திரையில் முருகன் இரு தேவியருடன் மயில்மீது அமர்ந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. திரைக்குப்பின் ஒரு பெட்டியில் சடாட்சர மந்திர வடிவ யந்திரம் உள்ளது. மரகத வேலுக்குதான் அபிஷேகம், ஆராதனை, பூஜை நடத்துவர். இங்கு வைகாசி விசாக விழாவைப் பிரபலமாக நடத்துகின்றனர். இதற்கு "ஆறுமுகம் புறப்பாடு' என பெயர்.

குன்றுதோறாடும் அந்தக் குமரக் கடவுளை வைகாசி விசாக நாளில் வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுவோம்.

சிந்தனைக்கினிய கந்தபுராணம்


சம்ஸ்க்ருதத்தில் பதிணெண் புராணங்கள் உள்ளன:
சைவம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், மத்ஸயம், கூர்மம், பிரம்மாண்டம், காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம், பிரம்மம், பத்மம், ஆக்னேயம், பிரம்மகைவர்த்தனம் என்பவற்றுள் ஸ்கந்தபுராணம் என்ற மஹாபுராணமும் ஒன்று.
“முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்”
என்று நூற்பயனை விதந்து உரைக்கிறது இப்பாடல்:
“இந்திராகிப் பார் மேல் இன்பமுற்றினிது மேவிச்
சிந்தையில் நினைந்த முத்தி சிவகதி அதனில் சேர்வர்
அந்திமில் அவுணர் தங்கள் அடல் கெடமுனிந்த செவ்வேள்
கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்தோதுவோரே”
பெருமை மிக்க இப்புராணத்திலுள்ள ஆறு பெரிய சங்கிதைகளுள் ஒன்று சங்கரசங்கிதை. இச்சங்கிதையிலுள்ள பதின்மூன்றாயிரம் ஸ்லோஹங்களால் ஆக்கப்பெற்றது சிவரஹஸ்ய காண்டம் என்ற உயர்ந்த பகுதி. இதில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவ்வேழு காண்டங்களுள் முதன்மையான ஆறு காண்டங்களை இணைத்து அழகுத் தமிழில் ‘கந்தபுராணம்’ என்ற ஞானக்களஞ்சியமாக தந்திருக்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
பொ.பி 12, 13ம் நூற்றாண்டுகளில், தமிழகத்தின் காஞ்சியில், குமரகோட்டம் முருகன் ஆலய அர்ச்சகராகத் திகழ்ந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகனே ‘திகட சக்கர’ என்று முதல் அடியெடுத்துக் கொடுக்க 10345 அருந்தமிழ்ச் செய்யுள்களால் கந்தபுராணத்தை அவர் ஆக்கியிருக்கிறார்.
‘உபதேச ரத்னாகரம்’ என்று போற்றப்படும் கந்தபுராணம் காப்பிய இலக்கணங்கள் மிக்கதாக, சித்தாந்தக் கருத்துக்களின் செறிவுடையதாக, தத்துவார்த்த உண்மைகள் பொருந்தப் பெற்றதாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கந்தபுராணத்தின் தமிழ் நடையும் வியந்து நயந்து உண்ண வேண்டியது.
முருகப்பெருமானாலேயே ஆணையிடப்பெற்று, அவனாலேயே தினமும் பரிசீலனை செய்யப்பெற்றது.  ஆயினும், அரங்கேற்றத்தில் அறிஞர் முன்றலில் இலக்கணச் சந்தேகம் உண்டானது. அப்போது கந்தவேட் பெருமானே சிறுவடிவு தாங்கி வந்து, தன்னால் அங்கீகரிக்கப்பெற்ற நூல் அது என்று யாவரும் அறிய சந்தேகம் நீக்கினார். மிகத் தெளிவாக ‘இறையாணை’ பெற்ற நூல் கந்தபுராணம் என்பது சைவத்தமிழ் மக்களின் நம்பிக்கை.
அரிய தத்துவப்புதையல்




கந்த புராsoma0243ணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.
கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம்.  என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.
அவனது மனைவியராகப் புராணம் இரு தேவியரைக் காட்டும். அவளுடைய வலது பக்கம் விளங்குபவள் வள்ளி. அவள் இச்சா சக்தி. மண்ணுலகில் பிறந்து வளர்ந்தவள். தமிழ்மகள். வேடுவனான நம்பிராஜன் புதல்வி. அத்தேவி இகலோக சுகத்தைத் தருவாள். அத்தேவியை முருகன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டான்.
முருகனின் இடது பக்கம் எழுந்தருளுபவள் தேவசேனா. விண்ணுலகில் பிறந்தவள். தேவராஜனின் புதல்வி. கிரியாசக்தி. அவளை இறைவன் கற்பு முறையில் பிரம்ம விவாகம் செய்தான். முருகனை வழிபடுவோருக்கு அத்தாய் பரலோக வாழ்வில் இடம்தருவாள்.
முருகனின் மூன்றாவது சக்தி வேல். முருகனின் கரத்தில் விளங்குகிறது. வெற்றியைத் தருவது. ஞானமே வடிவெடுத்த ஞானசக்தி அது.
‘வெல்’ என்ற வினையடியில் தோன்றியது ‘வேல்’. அது ஞானமே உருவானது. ஆழந்து அகன்று கூர்மையாகி அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. செவ்வேட் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் சேவற்கொடி அஞ்ஞான இருளகற்றி ஞானஒளி வரக் கூவுகிறது. (கொக்கு- மாமரம், அற- அறுத்த, கோ- நம் அரசே) வாகனமான மயில் ஆசை என்ற பாம்பை அடக்கி பிரம்மசக்தியாக ஓம்கார ரூபமாக விளங்குகிறது.
முருகன் கைவேலுக்கு உரிய சிறப்பு வேறு எப்படைக்கும் இல்லை. தமிழ் இந்துக்களில் பலருக்கு ‘வேலாயுதம்’ என்றே பெயர் இருக்கிறது. இப்படி எவரும் வேறு எந்தப் படைக்கலனையும் தங்கள் பெயராகக் கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையிலுள்ள பிரபல யாழ். நல்லூர் போன்ற பல முருகன் ஆலயங்களில் கருவறையில் முருகனின் திருவுருவத்திற்குப் பதிலாக வேலாயுதமே விளங்கிடக் காணலாம்.
‘அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’
என்று தேவர்களின் வாக்காக வேலாயுதத்தைக் கந்தவேளாகவே கண்டு போற்றியதாகக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
இறையருள் துணையுடன் ஆணின் விந்துவும் பெண்ணின் நாதமும் கலந்து குழந்தையாகிறது. (அருணகிரிநாதர் ‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்று இதனைத் திருப்புகழில் பாடுவார்.) இறைவனிடமிருந்து வந்த நாமெல்லோரும் இறுதியில் இறைவனையே சென்றடைய வேண்டும். அழிவின் பின்னர் சூரபத்மன் நாதவுருவாகச் சேவலாக மாறி இறைவனின் கொடியாகவும் விந்துருவுருவாக மயிலாக மாறி முருகனின் வாகனமாயும் மாறியது இதை வெளிப்படுத்துகின்றது என்பர். அவனையே அடைந்து அவனருளாலே அவன் தாள் வணங்குதலே முக்தி. இதனைப் பெற்றான் சூரன். இச்சம்பவத்தை ‘சூரன் பெற்ற பேறு’ என்று கொண்டாடுவார்கள்.
ஆன்மாக்கள் நல்லறிவை நாடித் தவிக்கும் போது இறைவனே குருவாக வந்து அருள்வான் என்பதை சிவனார் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசித்தமை சுட்டுகிறது.
சிவனார் காமனை எரித்ததும் காலனைக் காலால் உதைத்ததும் அவர் காமத்தையும் மரணத்தையும் வென்றவர் என்பதையும், அவர் அடியார்களுக்கும் இவற்றால் துன்பமில்லை என்பதையும் உணர்த்தி நிற்கிறது.
இறைவனை இகழ்ந்து அவனை அவமதிப்பவர்கள் மிகுந்த அல்லல்களை அநுபவிப்பர் என்பதை  தக்கன் யாகத்தை இறைவன் அழித்தமை காட்டுகின்றது.
கந்தபுராணத்தில் தாரகன், சிங்கன், சூரபத்மன் என்ற மூன்று அசுரச் சகோதரர்களின் கதை கூறப்படுகின்றது.  தாரகன் உலகமே உண்மை என்று வாழ்ந்தவன். சைவசித்தாந்த நிலையில் அவனை “மாயா மலத்திற்கு” உவமிப்பர். சிங்கன் கன்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; அவனைக்  “கன்ம மலத்திற்கு” உவமிப்பர். சூரபத்மன் “ஆணவ மலம்”. இறுமாப்பே அவன் இயல்பு.
இம்மூவரையும் முறையே அழித்தமை ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே இயல்பாகச் செய்ய வல்ல பெருஞ்சிறப்பு.
‘தன்னைத் தான் காதலாகில் எனைத் தோன்றும்
துன்னற்க தீவினைப் பால்’
என்பது வள்ளுவர் மொழி.
அதாவது ‘நீ உன்னை விரும்பி, உனக்கு நன்மையை விரும்பி, தீவினை ஏதும் செய்யாமல் இருப்பாயாக’ என்று அறிவுறுத்துகிறார். சூரனோ எல்லா விதத் திறனும் அறிவும் உடையவனாய் இருந்தும், இறையருள் பெற்றவனாய் இருந்தும், தீவினை செய்து தன்னைத் தானே அழித்துக் கொண்டமை வள்ளுவர் வாக்கிற்குத் தக்கச் சான்றாகும்.
இயற்கையும் தெய்வமே




மூவுலகிற்கும் முதல்வன் குழந்தையானான். தேவர்களின் வேண்டுகோளின் படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பிறந்து ஆகாயத்தில் தவழ்ந்து வாயுவாலும் அக்கினியாலும் தாங்கப் பெற்று ப்ருதிவியிலே ‘சரவணப்பொய்கை’  ஜலத்திலே குழந்தையாய் மாறியது என்று இப்புராணம் சொல்லுகிறது. இப்படிச் சொல்வது பஞ்சபூதங்களினூடாக இறையாட்சியை அவதானிக்கச் செய்கிறது. முருகனின் தோற்றத்தில் பஞ்சபூதங்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது.
ஆலய கும்பாபிஷேகக் கிரியைகளில் ஆகாயச் சூரியனிலிருந்து ‘சூரியாக்கினி’ என்ற நெருப்புப் பெறப்படுகிறது. அந்த அக்கினி மண்ணில் உள்ள குண்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டு வாயுவின் துணையுடன் வளர்க்கப்பெறுகிறது; பின், அதனை கும்பஜலத்தில் இணைத்து வழிபாடாற்றுவதுடன், இறுதியில் இறை திருவுருவத்தில் நீரால் அபிஷேகித்து இறைசாந்நதித்யம் உண்டாகப் பிரார்த்திக்கப்படுகிறது. இதைப் பஞ்சபூதங்கள் இணைந்து செயல்படும் நிகழ்வோடு இணைத்து நோக்கலாம்.
இந்த இடத்தில் ‘ஒருதிரு முருகன் வந்து உதித்தனன்’ என்று கச்சியப்பர் குறிப்பிடுவார். அதாவது என்றுமுள்ள இறைவன் இந்த வேளையில் முருகனாக உதித்தனன். (காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கிறான். ஏனெனில், அவன் முன்னரே இருப்பவன்.)
போரும் சீரும்


போருக்கு முன் இரு முறை தூதனுப்பியமை, மறைந்து நின்று போராடாமை, ஆயுதம் ஏந்தாதவனுடன் போராடாமை, தனக்குச் சமானமற்ற வீரனுடன் போராடாமை, புறங் கொடுப்பவனைக் கொல்லாமை ஆகிய செயற்பாடுகள் கந்தபுராணத்திலுள்ள போரில் ‘அசுரர்களால் கூட’ அநேகமாகக் கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். செஞ்சோற்றுக்கடனுக்குச் சிங்கனும், பிதிர்க்கடனுக்கு இரணியனும், மானத்திற்குச் சூரனும், கற்பிற்கு சூரன் மனைவியும் கந்தபுராணத்தில் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றனர்.

ஆனால், இன்றைய உலகில் நடைபெற்ற, நடைபெறும் மோதல்கள் இவற்றை எல்லாம் புறக்கணிக்கிறது.  எந்தப் பிரச்சினையிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்கிற மருத்துவமனையையும் தாக்குகின்றனர்.
இவையெல்லாம் நிச்சயமாக இன்றைய சமூகத்தைக் காட்டிலும் கந்தபுராண காலச் சமூகம் உள, ஒழுக்க ரீதியில் உயர்வானதாகவே இருந்திருக்கும் என நம்பச் செய்கின்றன.
கந்தபுராணம் என்பது தமிழரின் வாழ்வோடு இணைந்தது. ஆக, இதில் ஊறிய எவரும் இதைக் கதை என்று சொல்வதில்லை. சிற்சில இடங்களில் கதைக்குரிய உயர்வு நவிற்சி இருந்தாலும், இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்மையில் நடந்த சம்பவம் என்றே அவர்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறான ஆய்வுகளின் படி முருகன் பிறந்தது கைலாசச் சாரல் என்றும், தரை வழி யுத்தம் நடந்தது திருப்பரங்குன்றம் என்றும், விண் வெளி யுத்தம் நடந்தது திருப்போரூர் என்றும், கடல் வழிச் சமர் நடந்தது திருச்செந்தூருக்கு அப்பாலுள்ள கடல் என்றும் ஐதீகம். இலங்கையின் கதிர்காமத்தில் படைவீடு அமைத்துத் தங்கி, அப்பால் தெற்கே சூரனுடைய நகரை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுவதால் சூரன் அக்கால ஆப்பிரிக்கதேச அரசன் என்று கருதுவாரும் உள்ளனர். முருகனின் வலது புறம் எழுந்தருளியிருக்கும் வள்ளியம்மை தமிழ் மொழி பேசும் குறவர் இனப் பெண் என்பது வேறு ஐதீகம். இதுவும் ஆய்விற்குரியதே.
யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரத்தில் உள்ள பிரபல  ஸ்கந்த ஸ்தலம் ‘மாவிட்டபுரம்’.  ஆக, திருச்செந்தூருக்கும் மாவிட்டபுரத்திற்கும் இடைப்பட்ட பரந்த சமுத்திரப் பகுதியில் மாமரமாகி மாயா ஜாலங்கள் செய்து முரகனுடன் சூரன் போராடியிருக்கிறான்.
‘தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்’
என்ற கந்தபுராண அறைகூவல் எங்கள் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி “ஓ… அஞ்ஞானிகளே, கடந்த காலம் போயது. உங்கள் அறியாமை மூட்டைகளை நீக்க நல்ல ஒரு வழி கிடைத்திருக்கிறது. உடனடியாகக் கந்தப்பெருமானின் கழலடிகளைப் போய்ச் சேருங்கள். நீங்கள் ஞானியராவீர்கள்…” என்று நமக்கெல்லாம் அரிய பெரிய நற்செய்தி சொல்கிறது.
காதல் முருகனைக்  காதலி



முருகு என்பது அழகு. ஆதன் மறு பெயர் அன்பு. அவன் பால் காதல் கொண்டோர் அனேகர்.
இறைவனின் இரு-பெண் திருமணம் சமூக சமத்துவத்தைக் காட்டி நிற்கிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த அதே இறைவன், தானே வலிய வந்து மனிதர்களில், அதிலும் சாதி முதலிய வேறுபாடுகள் பாராமல் வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான். இதை நம் புராணங்கள் மிகவும் தெளிவாகக் காட்டி வந்துள்ளன. இவை தவிர பூவுலகைச் சேர்ந்த வள்ளியம்மைக்குக் கொடுக்கப்படும் உயர்ந்த அந்தஸ்து தனிச்சிறப்பு. எவருமே ‘முருகனுக்கு வள்ளி’ என்றே கூறக் கேட்கிறோம்.
மேலும் வள்ளி தமிழ் மகள். இது தமிழுக்குக் கிடைத்த சிறப்பு.
“….. ஒரு கோடி முத்தம்  தெள்ளிக் கொழிக்கும் கடற் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே”
என்று இதைப் பற்றி அருணகிரிப் பெருமான் உருகிப்பாடுகிறார்.
ஆணும் பெண்ணும் கூடி வாழும் வாழ்விற்கு இந்துப்பண்பாடு கொடுத்த முதன்மையையும்,  காதற் சிறப்பையும்,  அன்னை உமையாளுக்கும் இறைவனுக்கும் நிகழ்ந்த திருமணமும்  வெளிப்படுத்துகின்றது.
‘கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’
என்ற ஞானசம்பந்தர் வாக்கு ஈண்டு சிந்திக்கத் தக்கது.
சைவ-வைஷ்ணவ ஒற்றுமை




கந்தபுராணக் கதையுடன் இராமாயணக் கதையை ஒப்பு நோக்கும் போது சைவ-வைஷ்ணவ ஒற்றுமையை உணரலாம்.
சைவசமயிகளின் பரம்பொருளான சிவபெருமானின் புதல்வன் முருகன். வைஷ்ணவர்களின் பரம்பொருளான விஷ்ணுவின் புதல்விகளாகவும் கொண்டாடப்பெறும் வள்ளி, தேவசேனா தேவியரைக் கல்யாணம் செய்தமை சமய ஒற்றுமை.  தவிர முருகன் சிவகுமாரனே ஆகிலும் விஷ்ணு அம்சம் நிரம்பப் பெற்றவன். ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களில் நடைபெற்ற அத்புத நிகழ்ச்சிகளோடு அவனது ஒவ்வொரு செய்கையையும் இணைத்துப் பார்க்கும் போது ஏற்படும் இன்பமே தனியானது. அலாதியானது.
இதனை உண்மையிலேயே செயற்படுத்தியவர் சந்தக்கவி அருணகிரியார். திருப்புகழ் எங்கும் முருகன் பெருமை போலவே  திருமால் பெருமையும் நிறைந்திருக்கிறது. தவிர,  முருகனை அவர் ‘பெருமாள்’ என்றே விளித்துப் பெருமை செய்திருக்கிறார்.
‘காலமாய்க் காலமின்றிக் கருமமாய் கருமமின்றி
கோலமாய்க் கோலமின்றி குணங்களாய் குணங்களின்றி
ஞாலமாய் ஞாலமின்றி அநாதியாய் நங்கட்க்கு எல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண்டுற்றான்’
என்ற கச்சியப்ப சிவாச்சாரிய ஸ்வாமிகளின் திருவாக்கை மனங் கொண்டு அப்பெருமானின் திருவடிகளில் சரண்புகுவோம்.
முருகனுடைய ஆறுதிருமுகங்களும் அன்பு, அறிவு, ஆற்றல், அழகு, அமைதி, ஆளுமை ஆகிய பண்புகளை உணர்த்தும். நாற்றிசையும் மேலும் கீழும் ஆக, ஆறு பக்கங்களும் பார்த்து நிற்கும் இத்திருமுகங்களை நம்புவோருக்கு துன்பம் எத்திசையாலும் வாரா. அவனது கரங்கள் பன்னிரண்டும் கொடுப்பதற்கென்றே பிறந்தன. அதனை,
“முழுமதி அன்ன ஆறுமுகங்களும் முன் நான்காகும்
விழிகளில் அருளும் வேலும் வேறுள படையும் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலரடியும்….”
என்று தெவிட்டாத தேனாகத் தமிழில் பாடுவார் கச்சியப்பர்.
கந்தபுராண காவிய ரசனையை உளத்தில் கொள்வோம்.
செம்மொழியான செந்தமிழின் தலைவன் முருகன். அவனடி பணிவோம். தமிழ்ஹிந்து தர்மம் சிறக்கப் பிரார்த்திப்போம்.

ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்

1. ஒருவர் மற்றொருவருடன் பேசக் கூடாது.

2. சந்நிதியை மறைக்காமல் நிற்க வேண்டும்.

3. கடவுளைப் பற்றிய விஷயத்தை மட்டும் பேச வேண்டும்.

4. வழிபாட்டில் மனதை முற்றிலுமாக ஒருமுகப் படுத்த வேண்டும்.

5. இருந்த இடத்திலிருந்தே பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

6. வரிசையாகச் சென்று பிறர்க்கு இடையூறு இல்லாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

7. ஆலயத்தினுள் எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும்.

8. வழிபாடு முடிந்த பின்பு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

9. தெய்வத்திற்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும் உணவுப் பொருள்கள் மக்களுக்குப் பிரசாதமாக    வழங்கப்பட  வேண்டும்.





முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா

தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?
அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து , தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.
அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது.  மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது  என்பது மட்டும் உண்மை.

 


முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்


முருகக் கடவுளுக்கு  கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?
முருகன்:
முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
சரவண பவன்
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.
சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.
ஆறுமுகம்
சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
குகன்
மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.
குமாரன்
கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.
கந்தன்
கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்.
விசாகன்
விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.
வேலன்
வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.
குருநாதன்
பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார்.
சுப்பிரமணியம்
சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர். ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.
வேறு சில பெயர்கள்
கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உண்டென்பதால் வாகுலேயன் என்றும் ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும் தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது. இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. இந்த முருகக் கடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முருக பாடல்

பழனி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படைவீடு கொண்ட முருகா

பால் பழம் தேனோடு,
பஞ்சாமிர்தம் தந்து,
பக்தரைக் காக்கும் முருகா!


ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! - சக்தி
வடிவுண்டு, மயிலுண்டு, கொடியுண்டு! வேல் வேல்!
ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!
----------------------------------------------------------------------------------------------


 கண் கண்ட தெய்வமே!

கந்தன் கருணை திரைப்படம்

1. http://youtu.be/VdzznlsnMCo


2. http://youtu.be/yOqJtXiUfrk

3. http://youtu.be/Lw2GVoQsOMg

4. http://youtu.be/tkCk53HXSFk

5. http://youtu.be/jefSwZS-x8s

6. http://youtu.be/wmtfcKHvlc8

7. http://youtu.be/rm1XyiJdwY8

8. http://youtu.be/EBbzCiGejlU

9. http://youtu.be/-nwdbXKJ-Z0

10. http://youtu.be/07SnIJnEWFw

11. http://youtu.be/zHwc7fr_mXs

12. http://youtu.be/XU5iUc70nP4

13. http://youtu.be/RL9X0H5BfKc

14. http://youtu.be/Vysd9lzLeos

15. http://youtu.be/BES1e2xUEoE



வைகாசி விசாகன்

விசாகப் பெருமானே! வினையெல்லாம் தீர்ப்பவனே!
மயில்மீது வருபவனே! மனமகிழச் செய்பவனே!
வேதத்தின் மூலமே! வாழ்வளிக்கும் தெய்வமே!
உயிர்மேவும் அழகனே! உள்ளமெலாம் நிறைபவனே!


மேலான தெய்வமே! மெய்ப்பொருளாம் பிரணவமே!
மலையேறி வருபவர்க்கு மங்களங்கள் அளிப்பவனே!
வேலிருக்க வினையில்லை எனவென்முன் வருபவனே!
மலையிருக்கு மிடமெல்லாம் முருகனென அருள்பவனே!


சிவனாரின் நுதலினிலே பொறியாக வந்தவனே!
சரவணத்தில் குழந்தையென தவழ்ந்திங்கு உதித்தவனே!
புவியினிலே பல்வேறு அற்புதங்கள் செய்பவனே!
கரங்குவித்துத் தொழுபவரைக் கரையேற்றிக் காப்பவனே!


நாடிவரும் அடியவரின் துயரெல்லாம் தீர்ப்பவனே!
நானிலத்தில் மிக்காரும் ஒப்பாரு மிலாதவனே!
ஓடிவந்து அருளிடவே உனையன்றி யாரிங்கு!
மானென்னும் குறவள்ளி பதம்பணியும் மலைக்குகனே!


கோடிக்கோடி பக்தர்களின் குலதெயவம் நீதானே!
கோடிசூரியர் ஒளிசேர்ந்து குன்றின்மேல் திகழ்பவனே!
வேடிச்சி கரம்பிடிக்க வனத்தினிலே அலைந்தவனே!
தேடியுனைச் சரணடைந்தோம் தென்பழனி யாண்டவனே!


சூரனவன் செருக்கடக்கச் செந்தூரில் நின்றவனே!
சீறிவரும் வேல்விடுத்துச் சேனைகளை யழித்தவனே!
கூர்வேலால் சூரனவன் மார்பினையே பிளந்தவனே!
ஏறிவரும் பக்தர்களைக் காத்தருளும் குஞ்சரனே!


ஈராறு விழியாலே கருணையினைப் பொழிபவனே
இருக்கின்ற தொல்லையெல்லாம் தீர்ந்திடுமே நின்னருளால்
ஓராறு முகத்தினிலே மலர்கின்ற புன்சிரிப்பால்
தீராத வினையெல்லாம் தீர்த்தருளும் சேவகனே!


கண்ணிரண்டும் நின்னடியே காண வேண்டும்!
காலிரண்டும் நின்மலையே ஏற வேண்டும்!
தொண்டென்றும் நானுனக்கே செய்ய வேண்டும்!
நாவினிக்க நின்புகழைப் பாட வேண்டும்!


அன்னைதந்தை யானவனே! அறுமுகனே! அன்பனே!
ஏதுபிழை செய்தாலும் நீயெனையே பொறுத்திடணும்!
கன்னித் தமிழ்த் தெய்வமே! கந்தனே!நீ
காலமெலாம் என்னருகில் கைவேலுடன் வரவேணும்!


தெய்வானை இடமிருக்கக் குன்றத்தில் அருள்பவனே!
வள்ளித்தாய் வலமிருக்கத் திருத்தணியில் திகழ்பவனே!
மெய்ப்பொருளை உரைத்திடவே ஏரகத்தில் அமர்ந்தவனே!
பிள்ளைப் பிராயத்திலே பழனியிலே நின்றவனே!


அலைவாயில் அருகினிலே அருளுமெங்க ளழகனே!
பழமுதிர்ச் சோலையினிலே பக்தர்களைக் காப்பவனே!
கலையாத கல்வியும் குன்றாத செல்வமும்
நிலையாக நீயெமக்குத் தந்திடவே தாள்பணிந்தோம்!



வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!