Thursday 13 October 2011


ணவம், அகங்காரம் அதிகமானால் அதனை அழித்திட ஆண்டவன் அவதாரம் செய்கிறான்.

இரண்ய கசிபுவின் ஆணவத்தை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார்.

அகங்காரம், காமவெறி கொண்ட இராவ ணேஸ்வரனை மகாவிஷ்ணு மனித அவதார மாக- ராமனாக உருக்கொண்டு அழித்தார்.

சூரபத்மாதியர்களை பரமசிவனே மறுவுருவமாக- சுப்ரமண்யனாக உதித்து அழித்தார். 


மற்ற அசுரர்கள் அழிவை வதம் என்கிறோம்; சூரபத்ம அழிவை சம் ஹாரம் என்கிறோம். என்ன வேறுபாடு? மாமரமான சூரனை முருகன் வேலால் துளைக்க, அதன் ஒரு பாதி மயிலாகி முருகனுக்கு வாகனமாகியது. மறுபாதி சேவலாகி, அதனைக் கந்தன் கொடியாக ஏந்தினான். அவர்கள் ஒப்பந்தமும் 

அவ்வாறே. இருவரும் மற்றவரை ஏந்த வேண்டும். இந்த மாதிரியான வினோதம் முருகப் பெருமானுக்கு மட்டுமே.



கஜமுகாசுரனை வென்ற கணபதிக்கு அசுரன் எலியாகி வாகனமானான்; ஆனால் 
அவனை கணபதி ஏந்தவில்லை.

சுப்ரமண்யன் உதித்தது வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று. விசாக நட்சத்திரத்தில் தோன்றிய மற்ற இருவர்- கணபதியும் ராதாதேவியும். ராதை- கண்ணன் மணமும் 

அந்த நாளில்தான் நடந்தது. 


சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூர் என்பதால், கந்தனின் அவதார தின வைகாசி விசாகப் பெருவிழாவும் திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கிறது. மற்ற எல்லா இந்துக் கோவில்களிலும் இவ்விழா விமரிசையாகவே கொண்டாடப்படுகின்றன.

வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான்.
கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.

விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.

அக்னி ஏந்தியதால் அக்னி பூ.

கங்கை ஏந்தியதால் காங்கேயன்.

சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண   பவன்.

கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.

ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.

ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.

தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்- 

அதனால் முருகன். 

விசாகம், கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவன் முருகன். இதுவும் ஒரு சிறப்பு.

கந்தனின் அவதார சமயம்... சிவ- பார்வதியுடன் கங்கையும் அக்னியும் அங்கிருந்தனர். அவன் யார்மீது அதிக அன்பு வைத்திருக்கிறான் என்பதை அறிய விரும்பி, ஒரே சமயத்தில் நான்கு பேரும் குழந்தையை அழைத்தனர். அவன்தான் சிவஞான பண்டிதனாயிற்றே! பாரதம் இவ்வாறு கூறுகிறது:

சிவன் தந்தை; அக்னி வளர்ப்புத் தந்தை.

பார்வதி தாய்; கங்கை வளர்ப்புத் தாய்.

அவன் ஸ்கந்தன், விசாகன், சாகன், நைகமேயன் என நான்கு உருவம் கொண்டான்.

சிவனிடம் ஸ்கந்தனும், பார்வதி யிடம் விசாகனும், அக்னியிடம் சாகனும், கங்கையிடம் நைகமேய னுமாகத் தாவிச்சென்று அனைவரையும் மகிழ்வித்தானாம்.


முருகு என்றால் தமிழில் அழகு. இதில் மற்றொரு தத்துவ மும் உண்டு. அத்ரிக்கும் அனுசூயா தேவிக்கும் வினோதமாக உதித்த குழந்தை தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவ ஐக்கியமான உடல்; மூன்று தலை; ஆறு கைகள். இதற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?

மு என்றால் முகுந்தன்- அதாவது விஷ்ணு.

ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.

கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன்.

அதிகமாக மகாராஷ்டிரத்தில் தத்தாத் ரேயரை பரமகுருநாதராக வணங்குவர். மகா விஷ்ணுவை ஹயக்ரீவ அவதாரத்தில் ஞானகுருவாக வைணவர்கள் வணங்குவர். கிருஷ்ண அவதாரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து "கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு' என போற்றப்படுகிறார்.

பரமசிவன் தட்சிணாமூர்த்தியாக- ஞானமௌன குருவாக மதிக்கப்படுகிறார்.

பிரம்மன் வேதத்தையே கையில் கொண்டிருந்தாலும் அவரை குருவாக- ஏன் ஒரு தெய்வமாகக்கூட  கோவில்களில் வணங்குவதில்லை. காரணம், அருணாசலத்தில் பொய் கூறினார். சதுர்வேத புருஷன் என்று மார்தட்டினாலும், "ஓம்' என்னும் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல முடியாமல் முருகனால் சிறையிலிடப்பட்டார். "நீ அறிவாயோ' என சிவன் கேட்க, "கேட்கும் முறையில் கேட்கத் தயாராயிருந்தால் சொல்வோம்' என்று, தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன்- சிவகுருநாதன்- தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்றவன் முருகன்! 

சிவன், பிரம்மன் மட்டுமல்ல; மாமன் விஷ்ணுவும் முருகனைப் பணிந்தவரே. விஷ்ணுவின் சக்கரம் திருத்தணிகை முருகன் மார்பில் பதிந்து விட்டபோது, அதை பெருமாள் பணிந்து கேட்க, முருகன் எடுத்து அளித்தானாம். இன்றும் தணிகேசனின் மார்பில் சக்கரம் பதிந்த அடையாளம் இருக்கி றது. அதை சந்தனத்தால் மூடுகிறார்கள். 

எனவே, ஸ்கந்தன் (ஒன்றியவன், சேர்ந்தவன்) ஞானஸ்கந்தன்- ஞானபண்டிதன்- ஞானகுருநாதனாக வணங்கப்படுகிறான். 

குகன் என்ற பெயர், பக்தர்களின் இதயக் குகையில் இருக்கும் எந்தக் கடவுள்களுக்கும் ஒப்பும் என்றாலும், முருகனுக்கே அது உரியதாக உள்ளது. காசியிலிருந்து திரும்பிய முத்துசுவாமி தீட்சிதர் திருத்தணிகை வந்து, முதன்முதலாக "ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி' என்று பாடினார். 

ஸ்ரீவைகுண்டம் வாழ் குமரகுருபரன் ஊமை யாக இருக்க, திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதமிருந்து பயன் கிட்டாததால் கடலில் விழ யத்தனித்தபோது, அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன் "பூமருவும்' என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா பாடினான் என்றால், முருகனின் அருளை என்ன சொல்வது!

காஞ்சி குமரக்கோட்டத்திலும் கச்சியப்ப சிவாச்சாரியருக்கு "திகடச்சக்கர' என ஆனைமுகன் பாடலை அடி எடுத்துக் கொடுத்து தமிழில் கந்தபுராணம் பாட வைத்தார்.
அக்கோவிலிலேயே அரங்கேற்றம் செய்தபோது- அந்த ஆரம்ப அடியே இலக்கணக் குற்றம் என ஒரு புலவர் சொல்ல, முருகனே முதிர்ந்த புலவனாக வந்து தெளிவு ஈந்து முருக தரிசனமும் தந்தாரென்றால் கந்தன் கருணையை என்ன சொல்வது!

முற்காலத்தில் பஞ்சாயதன பூஜை என்ற வழக்கமிருந்தது. சிவன், அம்பிகை, கணபதி, விஷ்ணு, சூரியன் ஆகியோரே அதற்குரிய தெய்வங்கள். சிவ பஞ்சாய தனம்  என்றால், சிவன் நடுவே இருப்பார். மற்ற நான்கு தெய்வ வடிவங்கள் நான்கு புறமும் இருக்கும். இதனில் முருகன் இல்லை.
திருச்செந்தூர் முருகன் ஆதிசங்கரரிடம் சிறிது விளையாடினான். சங்கரருக்கு நோய் ஏற்பட்டது. செந்தூர் முருகன்மீது அவர் புஜங்கம் பாட, நோய் தீர்ந்தது. அதன்பின் முருகனை பஞ்சாயதன தெய்வ ரூபங்களுடன் சேர்த்து "ஷண்மதம்' என போற்றி வழிபட வகுத்தார். என்னே முருகன் பெருமை! ஷண்முகனே ஷண்மதம் என போற்றும் அளவுக்கு பக்தர்கள் வழிபடு கிறார்கள்.

எனவே முருகனை நாம் நம்பிக்கையுடன் வணங்கிட, புனித கங்கை போன்று ஆறாக அருள் மழை பெய்து, அவகுணங்களை அடியோடு அழித்து, ஞானானந்த பிரகாசத் தில் நம்மை ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்வோம்; குகமயமாக ஆவோம்.


ஸர்வம் குஹ மயம் ஜகத்.

வேலுண்டு வினையில்ல; மயிலுண்டு பயமில்லை; சேவலுண்டு ஏவலில்லை; குகனுண்டு குறைவேயில்லை!


 சஷ்டிக்கு இன்னொரு காரணம்!


தமிழகத்தில் ஐப்பசி அமாவாசைக்குப் பின் (தீபாவளி) வரும் சஷ்டி திதி அன்று முருகப் பெருமானைப் போற்றி விரதம் கடைப்பிடித்து சஷ்டி விழா கொண்டாடுவதுபோல், வடநாட்டில் சில இடங்களில் ஐப்பசி சஷ்டியன்று சட் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. இந்த விழா நீர் நிலைகளில் நடைபெறும் விழாவாகும். 

சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் நலமுடன் இருக்க மூன்று நாட்கள் விரதம் கடைப்பிடித்து இவ்வழிபாட்டினைச் செய்கிறார்கள்.



கங்கை நதி ஓரங்களிலும்; பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலும் சூரிய பூஜையை நடத்துவது வழக்கம்.

பூஜைப் பொருட்களான வெற்றிலைப் பாக்கு, பூ, பழங்கள், தேங்காய், சந்தனம், கரும்பு, இனிப்புகள், பலகாரங்களை பெரிய கூடையில் வைத்து ஆண்கள் நீர் நிலைக்கு எடுத்து வருவார்கள். நதிக்கரையோரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, கரும்புகளால் கூடாரம்போல் அமைத்து, அதில் பூஜைக்குரிய பொருட்களை வைப்பார்கள்.


சுமங்கலிகள் சஷ்டி அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும், மறுநாள் விடியற்காலையிலும் நீராடி, சூரியன் உதயமானதும் நீர் நிலைக்குள் நின்று சூரியனுக்கு அர்க்கியம் விட்டு, மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.


மாலையிலும் காலையிலும் சூரியனை வழிபடுவதன் நோக்கம்- இரவும் பகலும் எப்படி சமமாக உள்ளதோ (ஐப்பசியில் இரவும் பகலும் சமமாக இருக்கும்) அதுபோல இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாக இருப்பதாகச் சொன்னாலும், தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் நலமுடனும் சுகமுடனும் வாழவேண்டும் என்று சூரியனைப் பிரார்த்திப்பதே சூரிய சஷ்டி வழிபாட்டின் குறிக்கோளாகும்.



இந்தப் பூஜையை சட் பூஜை, ரவிசஷ்டி என்று வடமாநிலத்தவர்கள் போற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment