Saturday 25 June 2011

வைகாசி விசாகம்

வதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு "கீழே இறங்கி வருதல்' என்று பொருள். உலகில் அதர்மச் செயல்கள் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும் போது, மக்கள் துயர் துடைக்க இறைவன் ஏதோ ஓர் உருவில் கீழே இறங்கி உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். சூரபத்மன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காக்கவே வைகாசி மாத பௌர்ணமி நாளன்று முருகன் அவதரித்தான்.

வைகாசி விசாகம் வேனிற்கால விழா நாள்; முருகனின் அவதார நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தவன் முருகன். சிவபெருமானின் ஆறு தலைகளிலும் 18 கண்கள் உண்டு. ஆனால் முருகன் தோன்றியதோ ஆறு தலைகளிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களால் மட்டுமே. நெற்றிக் கண்ணால் அரூபத்தைக் காண இயலும். சிவனின் நடுக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியமையால் அவன் ஆண் பிள்ளை.

உலகிலுள்ள ஜீவன்களின் தோற்றம் நான்கு வகைப்படும். அவை பைகளில், முட்டையில், நிலத்தினில், வியர்வையில் என புராணம் கூறுகிறது. இதைக் குறிக்கவே படைக்கும் கடவுளுக்கு நான்கு தலைகள். நாம் எல்லாரும்  பெண் வழித் தோன்றியவர்கள். அதனால் பெண் பிள்ளைகள். முருகன் ஒருவன் மட்டும் ஆண் மூலம்- ஆறு அதாவது சிவனின் ஆறு நெற்றிக் கண்களின் சுடரால் பிறந்தவன். எனவே இவன் மட்டும்தான் ஆண் பிள்ளை.

முருகனின் ஆறு தலைகளும் நான்கு திசைகளுடன் மேல், கீழ் என ஆறு திசைகளையும் நோக்கும் வடிவில் அமைந்துள்ளது. முருகனின் 12 கரங்களும் உயிர் எழுத்துகள் 12 ஆகும். முருகனுக்கு தமிழ்க் கடவுள் எனப் பெயர் உண்டு. 12 கரங்களும் 12 மாதங்களையும் குறிக்கும். அத்துடன் வலப்புற ஆறு கரங்கள் உத்தராயணம்; இடப்புற ஆறு கரங்கள் தட்சிணாயனம் எனும் காலத்தைக் குறிக்கும். அவன் வைத்திருக்கும் ஆயுதங்கள் யாவும் நம்மைக் காக்கத்தான்.

பழனியில் கீழே இருப்பது திருஆவினன்குடி. இங்கு குழந்தை வடிவில் முருகன் உள்ளார். மலைமீது பழனி ஆண்டவராக வீற்றுள்ளார். திருவாவினன்குடி என்பது திரு- லட்சுமி, ஆ- காமதேனு, இனன்- சூரியன். இவர்கள் தவம் செய்த இடம். இங்கு வேலாயுதபாணியும், மேலே தண்டாயுதபாணியும் அருள்கிறான்.

போகர் என்ற சித்தர் தன் தவ வலிமையால் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கியவர். "கனக குளிகை' என்ற மூலிகையால் நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் வல்லமை உடையவர். இவர் மனித குலம் பயனுற வேண்டும் என்று முருகன் சிலையை நவ பாஷாணத்தால் நிறுவி, தண்டம் கொடுத்து பழனி மலைமீது தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்தார்.

வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு நடைப்பயணமாக பழனி வந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். 

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றுள் வைகாசி மாதத்தில் ஆன்மிகச் சிறப்புகள் நிறைய உண்டு.

வைகாசி மாதத்தில்தான் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதில் முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத் தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

அத்துடன் அம்மன் ஆலயங்களில் விழாக்களும், வைணவ ஆலயங்களில் பிரம்மோற்சவமும் கருட சேவையும் நடைபெறும். சிவ திருவிழாக்களும் அதிகம் நடைபெறும். அதில் குடந்தை ஆதி கும்பேஸ்வரர் தீர்த்தவாரி வைபவமும், மயிலை கபாலீஸ்வரர் விழாவும், வெள்ளீஸ்வரர் ஆலய திருக்கல்யாணமும் வைகாசியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

வைகாசி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் ரிஷப விரதம் முக்கியமானது.

பெரும் தவமிருந்து 1008 அண்டங்களை 108 யுகங்களாக ஆட்சி புரிந்து உயிரினங்களை வதைத்த சூரபத்மனை அழிக்க, ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக ஆறுமுகன் அவதரித்த நாள்தான் வைகாசி விசாகம்.

சக்தியின் துணையால் சக்திவேல் பெற்று சூரனின் ஆணவத்தை அழித்து ஆட்கொண்ட ஆறுமுகனை வைகாசி விசாகத்தன்று வழிபட்டால் நம் துன்பங்களும் தீய குணங்களும் அழியும்.

அன்று அதிகாலை எழுந்து நீராடி, "முருகா' என கூறி திருநீறு அணிந்து, முருகன் படத்தின் முன் நைவேத்தியம் வைத்து, முதலில் விநாயகர் அகவல் பாடி கணபதியை வழிபட்டு, பின் முருகனுக்குரிய ஸ்லோகங்கள், கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்பிரமணிய சோடஷ நாமாக்கள் கூறி அர்ச்சித்து, தூபதீபம் காட்டி நைவேத்தியம் செய்து பூஜித்தால் நல்ல பலன் பெறலாம்.

சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன், கார்த்திகைப் பெண்டிரால் பாலூட்டப் பெற்றதால் கார்த்திகேயன், மன்மதன் போன்று அழகாக இருப்பதால் குமரன் என்று இன்னும் பல பெயர்களும் முருகனுக்கு உண்டு. விசாக நட்சத்திரத்தின் அதிபதி பிரகஸ்பதி என்ற குரு; தேவதை முருகன். முருகு என்ற சொல்லே அழகு. முருகன் கைவேல் ஆயுத எழுத்தாகும். முருகு என்ற சொல் தமிழில் உள்ள வல்லின, மெல்லின, இடையின எழுத்துகள் ஒன்றாக இணைந்து உருவானதுதான்.

முத்து பிறவியிலேயே ஒளியுடையது. தீப்பொறியில் தோன்றிய முருகன் ஒளிமயமானவனானால் முத்தையன் என்ற பெயரும் உண்டு. முருகன் மும்மூர்த்திகளின் சொரூபம்.மு- முகுந்தன்; த்ரு- ருத்ரன்; க- கமலாசனன் (பிரம்மா). எனவே முருகனை வணங்கி மும்மூர்த்திகளை வணங்கியதாகும்.

வைகாசி விசாகத்தன்று திருத்தணியில் வழங்கப்படும் விபூதியும் பாதரேணு எனப்படும் சந்தனமும் தீராத வியாதிகளைத் தீர்க்கும்.

காஞ்சி குமரக் கோட்டத்தில் பிரம்மோற்சவம் என்ற பெருவிழா நடக்கும். முருகன் பிரம்மனுக்கு தண்டனை வழங்க, ஈசன் குறுக்கிட்டு சமரசம் செய்து, முருகனை பிரணவ மந்திரப் பொருள் விளக்கம் கேட்ட தலம் குமரக் கோட்டம்தான். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை அரங்கேற்றிய இடமும் இதுதான். அப்போது முருகனே வந்து ஆசி கூறி "திகட சக்கர'த்திற்கு விளக்கம் அளித்தார். காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம் ஒரு புறம், காமாட்சியம்மன் ஆலயம் ஒரு புறம் இருக்க, நடுவில் குமரக் கோட்டம் அமைந்துள்ளது. தினமும் தேனாபிஷேகம் நடக்கும் தலமிது.

உற்சவக் காலங்களில் ஏகாம்பரநாதரும், காமாட்சியும், வரதராசப் பெருமாளும் குமரக்கோட்ட ஆலயத்தை வலம் வருவார்கள். தாயும், தனயனும் ஈசனை வழிபட்ட தலம் காஞ்சிபுரம். பிரம்மனுக்கு வைகாசி விசாக விழாவில் தனி இடம் உண்டு. முருகன் தவநிலையில் உள்ளார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்திற்கு கொடி மரம் ஏற்றும் கயிறை, வசவாத்துறை என்ற மீனவ குப்ப கிறிஸ்துவர்கள் தேங்காய் நாரில் திரித்துக் கொடுப்பார்கள். இது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. அன்று மட்டும் அடைக்கப்பட்டே இருக்கும் கிழக்கு வாயிலைத் திறந்து குதிரை வாகனத்தில் பகவதி அம்மன் உலா வந்ததும் பின் மூடப்படும்.

ஆறுமுகன் ஆறு சமயக் கடவுள்

இந்து மதத்தின் உட்கிளைகளாக ஆறு சமயங்கள் உள்ளன. ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு கடவுளை முன்னிலைப்படுத்தி இருக்கின்றனர். இந்த ஆறு சமயத்திற்கும் சமரசக் கடவுளாக ஆறுமுகன் இருக்கிறார். இந்த ஆறு சமயங்களுக்கும் முருகனே பொதுக் கடவுள்.

கௌமார சமய இறைவனான முருகன் சைவ சமய சிவபெருமானுக்கும், சாக்த சமய பராசக்திக்கும் மகன். வைணவ சமய தெய்வமான மகாவிஷ்ணுவுக்கு முருகன் மருமகன். காணாபத்ய கடவுள் கணபதியின் சகோதரன். சௌரத்தின் கடவுள் சூரியன். கரபாஸ்கரன் என்ற முருகனே சூரியன் என்றும் அழைப்பர். இதனால் ஆறுமுகன்தான் ஆறு சமயக் கடவுள். 

முருகனை ஞாயிறு அன்று திருப்பரங்குன்ற படைவீட்டில் வணங்கலாம். திங்கள்கிழமை திருச்செந்தூரிலும், செவ்வாய்க்கிழமை திருவாவினன்குடி என்ற பழனியிலும், புதன்கிழமை திருத்தணியிலும், வியாழக்கிழமை சுவாமிமலையிலும், வெள்ளிக்கிழமை பழமுதிர்சோலையிலும் வணங்குவது சிறப்பு. சனிக்கிழமையில் எல்லா படை வீடுகளையும் வணங்கலாம்.

ஏக தின வழிபாடு

கொங்கு மண்டலத்தில் சீனாபுரம் என்னுமிடத்திலுள்ள 60 அடி உயர குன்றில், முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். சுவாமி மலைபோல் 60 படிக்கட்டுகள் உண்டு. இங்கு திங்கள், வெள்ளியில் ஏராளமான பக்தர் வருவர்.


இங்கு அருகருகே ஆறு மலைகளில் முருகன் அருள்புரிவதால் இதை ஆறு படை வீடுகளாக ஒரே நாளில் எல்லா முருகனையும் வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒரே நாளில் காலையில் சென்னிமலை முருகன், முற்பகலில் சிவன் மலை முருகன், உச்சி வேளையில் கைத்த மலை வேலவன், மாலையில் அருள் மலை முருகன், அஸ்தமன சந்தியில் சீனாமலை முருகன், அர்த்த சாமத்தில் திண்டல் மலை வேலாயுதன் என வழிபடுவார்கள். இப்படி வழிபட்டால் நிறைந்த செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, பேரின்பம் ஆகியவற்றை முருகப் பெருமான் அருள்வார் என்பது மக்களின் நம்பிக்கை. ஈரோடு மாவட்ட பெருந்துறையில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் உள்ளது சீனாபுரமலை. இந்த ஆறு மலை அழகனை நாமும் வணங்கலாமே.

பிரம்மஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த தோஷம் விலகச் செய்ய வேண்டிய பரிகாரத்தை வைகாசி விசாகத்தன்று செய்வார்கள். இராமநாதபுரம்- பரமக்குடி சாலையில் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்திரகோசமங்கை என்னும் தலம். இதை ஆதிசிதம்பரம் என்பர். மரகத நடராஜர் உள்ள தலம். நளன் தோஷம் விலகிய தலமும் இது.

இங்கு வைகாசி விசாகத்தன்று அக்னி தீர்த்தத்தில் நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் மங்களநாதரை அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று உத்தரகோசமங்கை தல புராணம் கூறுகிறது.

அன்று உச்சி வேளையில் அறுகு, அரிசியை தலையில்  வைத்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தின் உள்ளே அக்னி தீர்த்தத்திலும் எள், அரிசி, கோமயம் வைத்து நீராடி மங்களநாதனை வழிபட்டபின் குறைந்தபட்சம் 11 சிவாச்சாரியார்களுக்கு சமாராதனை செய்து தட்சணை கொடுத்து வழிபட்டாலும் பிரம்மஹத்தி விரைவில் விலகும்.

திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்வார்கள்.

முருகனை வணங்கி "ஸுப்ரமண்யஸ்ய மஹிமா' எனத் தொடங்கும் ஸ்லோகம் ஜெபித்தாலும் பிரம்மஹத்தி தோஷம் விலகும். இவற்றை வைகாசி விசாகத்தன்றுதான் செய்ய வேண்டும்.

ஆறெழுத்து ஆறு ஆதாரங்கள்: 

முருகப் பெருமான் நமக்கு வீடுபேற்றை அளிக்கவல்லவன். இந்த வீடுபேற்றை பெற தடையாக இருக்கும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் என்ற ஆறு பகைவர்களை அழித்து வீடுபேறு அடைய நினைப்பவர்கள் ஆறுமுகனின் ஆறெழுத்தை ஓதவேண்டும். ஆறுபடை வீடுகளை சேவிக்க வேண்டும். அதிலும் வைகாசி விசாகத்தன்று செய்வது சிறப்பு.

நம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. இவற்றின் அடையாளமாய் விளங்குவது ஆறுபடை வீடுகள். மூலாதாரம்- திருப்பரங்குன்றம்; தெய்வானையை மணந்து உல்லாசமான தலம். சுவாதிஷ்டானம்- திருச்செந்தூர்; சிந்தனை அலைமோதி துன்பம் துடைக்கும் தலம். மணிபூரகம்- பழனி; ஞானதண்டபாணி உள்ள யோகத்தலம். அநாகதம்- திருவேரகம் என்ற சுவாமிமலை; தந்தைக்கு உபதேசித்த தலம். விசுக்தி- திருத்தணி; சல்லாபமாய் குறிஞ்சியில் விளையாடும் தலம். ஆக்ஞை- பழமுதிர்சோலை; ஞானப்பழம் உதிரும்  சோலையாகிய தலம். இதை, "உல்லாச நீராகுல யோக இத சல்லாப விநோதனும் நீ மலையே' என கந்தரனுபூதியில் அருணகிரிநாதர் கூறுகிறார். 

வேலனுக்கு சிவன் உபதேசம் செய்த தலம் தென்சேரிகிரி. இது பொள்ளாச்சி- திருப்பூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு மலைமேல் உள்ள கோவிலில் வள்ளி, தேவசேனாவுடன் வேலாயுதசாமி கோவில் கொண்டுள்ளார். இங்குதான் பகைவர்களை வெல்ல சிவன் வேலனுக்கு உபதேசம் செய்தார். முருகன் வாகனம் இடப்பக்கம் தலை திருப்பி இருக்கும். இடப்பக்கம் சேவற் கொடிக்குப் பதில் சேவலே உள்ளது.

முருகன் சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்ததுபோல் செம்பனார் கோவில் தலத்தில் அன்னை பார்வதிக்கு உபதேசம் செய்ததாக புராணம் கூறுகிறது.

திரையில் முருகன்

இலங்கை கதிர்காமத்தில் செம்பு ஓடால் வேயப்பட்ட கொட்டகைதான் முருகன் ஆலயம். இங்கு முன்வாசலில் ஏழு திரைகள் உள்ளன. இதில் ஏழாவது திரையில் முருகன் இரு தேவியருடன் மயில்மீது அமர்ந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. திரைக்குப்பின் ஒரு பெட்டியில் சடாட்சர மந்திர வடிவ யந்திரம் உள்ளது. மரகத வேலுக்குதான் அபிஷேகம், ஆராதனை, பூஜை நடத்துவர். இங்கு வைகாசி விசாக விழாவைப் பிரபலமாக நடத்துகின்றனர். இதற்கு "ஆறுமுகம் புறப்பாடு' என பெயர்.

குன்றுதோறாடும் அந்தக் குமரக் கடவுளை வைகாசி விசாக நாளில் வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுவோம்.

No comments:

Post a Comment