Sunday 26 June 2011

சொல்லச் சொல்ல இனிக்குதடா


முருகா!!! முருகா!!! சொல்லச் சொல்ல இனிக்குதடா!!!


செந்தமிழுலகில் கற்றோர் முதல் மற்றோர் வரை அனைவரும் எதற்கெடுத்தாலும், "முருகா! முருகா!' என்று சொல்லுவதைக் காண்கிறோம். தனிவழி நடந்தால் முருகா; தலை வலித்தால் முருகா; பாம்பைக் கண்டால் முருகா; பயங்கண்ட இடத்திலெல்லாம் முருகா என்கிறார்கள்.
விளையாடப் போகிற பையனும் விளையாட்டு வெற்றிக்காக முருகனை வேண்டிக் கொள்கிறான். வழக்கு வெல்ல- போர் வெல்ல- பேச்சுச் சிறக்க- காசுதிரட்டச் செல்கின்றவர்களும், செவ்வேள் திருவடித் துணையைப் பற்றியே செல்கின்றார்கள். "தனிவழிக்குத் துணை செங்கோடன் வடிவேலும் மயூரமுமே' என்று நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். நோயாலும், பேயாலும் நொந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பவன் முருகன்.
கலியுகம் என்பது தீமைகளுக்கு ஆக்கம் அளிக்கும் யுகம். உறுதியைக் குலைத்து, உண்மையை மறைத்து, தன்னறிவுக்கு மதிப்புக் கொடுத்து, பழமைகள் யாவும் கிழவர்களுக்கே உரியவை என்று ஒதுக்குங்காலம். இத்தகைய காலத்தில் இறையுணர்ச்சி குன்றா வண்ணம் எல்லாரிடத்தும் எல்லா வகையிலும் பாதுகாத்து வருபவன் முருகன்.
கடவுள் உணர்ச்சியில் கருத்தூன்றாதவனும் காவடி எடுத்து ஆடுகிறான். காவடியெடுத்தவர்களைக் கண்டால் கசிந்து கண்ணீர் சிந்துகிறான். உடலெல்லாம் வேல் குத்தி, நேர்த்தி செய்வதாகக் கூறி, நீங்காத பிணியிலிருந்து விடுதலை அடைகிறான்.
பழனி மலையில் முருகன் திருமுடியில் சாத்திய சந்தனம் குன்ம நோய்க்கு மருந்தாகிறது. வேளூரில் (வைத்தீசுவரன் கோயிலில்) சித்திராமிர்த தீர்த்தத்தில் வெல்லம் கரைத்தால், உடலிலுள்ள கட்டி கரைகிறது; மண் உருண்டை மருந்தாகிறது; சந்தனக் குழம்பு அமுதமாய் எல்லா இன்பங்களையும் கொடுக்கிறது.
செந்தூர்ப் பெருமான் முன்பு சென்றால் பிராரத்த கன்மங்கள் தம் வலி குன்றி, "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு' என்ற பழமொழிக்கிணங்க விலகுகின்றன. இவ்வண்ணம் முருகன் கலியுகத்திலும் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றான்.
வேளூர் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில், ""வேண்டிய வரங்கொடுப்பான் மெய்க்கண்ட தெய்வம் இத்தெய்வமல்லால் புவியில் வேறு இல்லை'' என்று குமரகுருபரர் கூறியருளுகிறார்.

சொல்லிலே இன்பம்:வாழைப்பழம் என்றவுடனே அழுகின்ற பிள்ளை வாய் மூடுகிறது; கற்கண்டு என்றால் களிப்புறுகிறது. அதுபோல முருகன் என்றவுடனே நமக்கெல்லாம் ஓர் இன்ப உணர்ச்சி எழுகிறது. இவ்வுணர்ச்சியை எழுப்பும் ஆற்றல் அச்சொல்லுக்கே இருக்கிறது. இந்நிலையில் அறிவுப் பொருளாய் இருக்கிற இறைவனாகிய முருகனை நேரிற்கண்டால் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கலாம்! முருகனைப் பார்த்தாலும், அவனது நாமத்தைக் கேட்டாலும், கட்டியணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கின்ற இனித்த சுவைக் கரும்பாக அவனை அனுபவித்தார்கள் நமது முன்னோர்கள். நமக்கும் அத்தகைய அனுபவம் வர வேண்டாமா?

இன்ப வடிவு :அன்புள்ள இடத்திலே இன்பம், உண்டு. இன்பமும், அன்பும் காரண காரியத் தொடர்புடையன. உலகில் காரணப் பொருள் காரிய அனுபவத்தில் கைவிடப்படுவதான வேற்றுமையுடையது. காரணம், காரியம் ஆகிய இரண்டுமாய் என்றும் இணைந்திருக்கும் பொருள் இறைவனே! நமது பெரியோர்கள் இந்த உண்மையை விளக்கவே இறைவனை "இன்பமே! என்னுடை அன்பே!' என்றும், "சோதியே! சுடரே! சூழொளி விளக்கே!' என்றும், "பூ வண்ணம் பூவின் மணம்போல' என்றும் இணைத்தே காட்டி, இறைவன் இன்ப அன்பு வடிவன் என்பதை அறிவுறுத்தியிருக்கிறார்கள். அன்பு ஒன்றே அவனை அடையும் நெறி என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
உலகத்திலே ஒவ்வொரு பொருளிடத்து ஒவ்வொரு நலம் இருக்கிறது. அது ஒவ்வொரு காலத்துத் தோன்றுகின்றது. வேனிற் காலத்து மாலைப் பொழுதிலே முல்லையும், மல்லிகையும் பூக்கின்றன. இளந்தென்றல் அவற்றின் மணத்தை அள்ளிக் கொண்டு வந்து நம்மேற் சொரிந்து இன்பூட்டுகிறது. கார்காலத்துக் கொன்றையும் நம் கண்ணிற்குக் களிப்பைத் தருகின்றது. முதுவேனிற் பருவத்திலே மாவும், பலாவும், வாழையும் ஆகிய முப்பழங்களும் தேனொழுகக் கனிந்து நாவிற்கு நலம் பயக்கின்றன.
இந்த நுகர்ச்சிகள் என்றும் எக்காலத்தும் உண்டாவதில்லை. இன்ப நுகர்ச்சிக்காகப் பிறந்த மனிதனோ, எல்லா நலங்களையும் எப்போதும் எய்த விரும்புகிறான். கிடைத்த நலம் மாறாமல் மடியாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது எதிர்நோக்கு. ஆனால் அவன் எண்ணப்படி மலர்ந்த மல்லிகை வாடாமல் இருக்குமா? கனிகள் அழுகாமல் இருக்குமா? தளிர்கள் பச்சென்றிருக்குமா? இல்லை; ஆதலால் "என்றும் எங்கும் நலம் குன்றாத பொருள் எது?' என்று நாடும் உள்ளம் அவனுக்கு உண்டாகிறது; அது இராப்பகலாக எங்கெங்கோ தேடுகிறது. தேடிக்கண்ட பொருள்கள், யாவும் நிறைந்தனவாக இல்லை. புறம்பே தேடிக்காணாத அவன், தனக்குள்ளேயும் தேடுகிறான். ஒரு பொருள் உள்ளும் புறம்பும் ஒத்து விளங்குவதை உயிராவணமிருந்து உற்று நோக்கிக் காண்கிறான். அப்பொருளிடத்தில் கண்ணிற்கு - காதிற்கு - மூக்கிற்கு - நாக்கிற்கு - உடலுக்கு - உள்ளத்திற்கு-உயிருக்கு நலம் பயக்கும் ஆற்றல் ஒரு சேர அமைந்திருக்கிறது. அது ஒரு இன்ப மலை; கற்கண்டுப் பதுமை; வெல்லப்பிள்ளையார். அத்தனைப் பண்பும் நிறைந்த அதனை மனிதன் அறிந்து அறிந்து அனுபவிக்கின்றான். அதுவே தானாய், ஏகனாய் இருக்கிறான். அனுபவ முதிர்ச்சி, அறிவதைப் பலகால் சொல்லியும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. முருகு, முருகன் என்ற பெயர்களைப் பரம்பொருளுக்கு அளிக்கிறான். சொல்லிச் சொல்லி இன்புறுகின்றான். இப்படி ஒரு நாமம் இல்லாத அப்பொருளுக்கு ஆயிரம் திருநாமங்கள் வந்தமைகின்றன.

முருகும்-முருகனும் :முருகு என்பது ஒரு பண்பு, உயர்ந்த பண்புகள் யாவும் முருகு என்ற ஒரு பொதுச் சொல்லால் வழங்கப்பெறும். முருகன் அப்பண்புகள் பலவற்றையும் உடைய பரம்பொருள். இறை தலைமை! அது பண்பு! அதனையுடையவன் இறைவன். இறையும் இறைவனும் ஒரு பொருளைத்தானே உணர்த்துகின்றன? அது போல முருகனே முருகு; முருகே முருகன்.சுருங்கக்கூறின், கண்ணுக்கு அழகாக, காதிற்கு நாதமாக, நாவிற்கு அமுதமாக, மூக்கிற்கு மணமாக, உடலிற்கு இனிய பரிசமாக, கருத்திற்கு விருந்தாக, உயிருக்கு உணர்வாக இப்படி எல்லாமாக இருப்பவன் முருகன்.
முருகு என்றவுடனே ""முருகமர் பூ முரண் கிடைக்கை'' ""மோட்டின் முல்லை மொய்மலர்க்கான முருகு வந்தெதிர்கொள நடந்தான்'' ""முருகு மெய்ப்பட்ட புலத்திபோல'' ""முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்'' ""படையோர்க்கு முருகயர'' ""முருகேர் பாணியும்'' ""முருகு பொறையுயிர்க்கும் மொய்பூங்காவில்'' ""முருகு வாய்மடுத்துண்டளிமூசும்'' முதலான இலக்கிய முருகுகள் நம்முன்னே வந்து மணம், தெய்வத்தன்மை வெறிக்கூத்து, வேள்வி விழா, தேன் முதலிய பண்புகளையும் பண்பையுடைய பொருள்களையும் நினைவூட்டி நிற்கும்.
இவையன்றித் திவாகரம், பிங்கலந்தை, நாமதீப நிகண்டு முதலியவைகளைப் புரட்டினால் அழகு, பூந்தட்டு, கள், எலுமிச்சை, எழுச்சி, அகில், முருகு என்னும் வாத்தியம் என்ற பொருளும் காணப்படும். இவ்வண்ணம் பலபொருள்களை உணர்த்தும் ஆற்றல் முருகு என்ற ஒரு சொல்லுக்கு உளதாதல் போல, அழகு முதலிய பண்புகளனைத்தையும் ஒரு சேரத்தாங்கி எப்பொழுதும் மக்கள் மனத்தைப் பிணித்து, சாவா மூவாப் பேரின்ப வடிவாய் நிற்பதொரு பேரருட்சக்தி இருப்பது நன்கு புலனாகும். அப்பொருளே முருகன்.

No comments:

Post a Comment